Published : 09 Jan 2024 07:00 AM
Last Updated : 09 Jan 2024 07:00 AM
சென்னை: சென்னை ஐஐடி, ஆஸ்திரேலியாவின் டேக்கின் பல்கலைக்கழகம் இணைந்து சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி அகாடமியை தொடங்க திட்டமிட்டது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி,டேக்கின் பல்கலைக்கழக துணைவேந்தர் இயன் மார்ட்டின் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அப்போது சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, டேக்கின் பல்கலைக்கழக துணைவேந்தர் இயன் மார்ட்டின் ஆகியோர் கூறியதாவது: இந்த இரு கல்வி நிறுவனங்களும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஆராய்ச்சியில் இருதரப்புக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடங்கப்படவுள்ள ஆராய்ச்சி அகாடமி ஒருங்கிணைந்த 4 ஆண்டுபி.எச்டி படிப்பை வழங்கும். இதன்மூலம் அதிக மதிப்புள்ள கல்வி உதவித் தொகை, இருகல்வி நிறுவனங்களைச் சேர்ந்தஆசிரியர்களின் கூட்டு மேற்பார்வை, உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி வசதிகள், வளங்கள் ஆகியவை பரிமாறிக் கொள்ளப்படும். குறிப்பாக இரு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 30 பேருக்கு (சென்னை ஐஐடி 20, டேக்கின் பல்கலை.10) 2024-ம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த ஆராய்ச்சிப் படிப்பில் சேருவோருக்கு தொடக்கத்தில் சர்வதேச அளவிலான மிகச் சிறந்த ஆராய்ச்சி வாய்ப்புகள் வழங்கப்படும். மேலும் இந்த புதிய முன்னெடுப்பில் கல்வி மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி பங்குதாரர்களைக் கொண்ட வலையமைப்பு உருவாக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT