Published : 07 Jan 2024 04:51 AM
Last Updated : 07 Jan 2024 04:51 AM
சென்னை: தமிழகத்தில் அரசு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களில் கற்றல், கற்பித்தல் பணிக்காக 10 முதல் 20 கணினிகள் மற்றும்புரொஜெக்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை ஒருங்கிணைந்த பிராட்பேண்ட் இணைய சேவை மூலம் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த சேவையில் இணைய வேகம் குறைவாக இருந்ததால் ஆய்வகங்களின் பயன்பாடும் குறைந்தது. இதை சரிசெய்ய அரசுப் பள்ளிகளில் 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணையதள சேவையை அமைத்துக் கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியது.
இதுதவிர மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 28,000 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த பள்ளிகளிலும் 100எம்பிபிஎஸ் வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை அதிகபட்சம் ரூ.1,500 கட்டணத்துக்குள் நிறுவிக் கொள்ளலாம். அதற்கான தொகை பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு அனுப்பப்படும் என்றுஅரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் இணையதள இணைப்பு வசதிகளை பிஎஸ்என்எல் வாயிலாக மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் எம்.ஆர்த்தி, துறை இயக்குநர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பிராட்பேண்ட் சேவை: அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணைய இணைப்புகளை அளிக்கும் வகையில் ஒரே சேவைவழங்குநராக தங்களை பரிந்துரைக்குமாறு பிஎஸ்என்எல் கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து ஏற்கெனவே இணைய இணைப்பு பெற்றுள்ள பள்ளிகள் தவிர்த்து, புதிதாக இணைப்பு பெறவுள்ள அரசுதொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பிஎஸ்என்எல் நிறுவனம் வாயிலாக பிராட்பேண்ட் இணைய சேவையை பெற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT