Last Updated : 04 Jan, 2024 06:40 PM

1  

Published : 04 Jan 2024 06:40 PM
Last Updated : 04 Jan 2024 06:40 PM

ஆளுநர் ஒப்புதல் அளித்து 40 நாட்களாகியும் புதுச்சேரி அரசு பள்ளிகளில் தொடங்கப்படாத சிறுதானிய மாலை சிற்றுண்டி திட்டம்

2020-ல் அப்போதைய முதல்வர் நாராயணசாமியால் தொடங்கி வைக்கப்பட்டு, ஒருநாள் நடைமுறையில் இருந்த காலை உணவுத் திட்டம். (கோப்பு படம்)

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய மாலை சிற்றுண்டி திட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்து 40 நாட்களாகியும், இத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. தமிழகத்தைப் போல் அரசு, அரசு சார் பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை புதுச்சேரி அரசு தொடங்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 300 அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்காக 11 இடங்களில் சமையல் கூடங்கள் நிறுவி மதிய உணவு விநியோகித்து வந்தனர்.

கடந்த காங்கிரஸ் அரசானது, 2018-ம் ஆண்டு, இந்த மதிய உணவுத்திட்டத்தை ‘அட்சய பாத்திரா’ தன்னார்வ அமைப்பு மூலம் செயல்படுத்த முடிவு எடுத்தது. இதற்காக இந்த அமைப்புடன் அரசு தரப்பில் இருந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத்தொடர்ந்து சமையல் கூடங்கள் நவீனப்படுத்தப்பட்டன.

கடந்த 2022 ஜனவரி முதல் நவீன சமையல் கூடம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு விநியோகத்தை ‘அட்சய பாத்திரா’ அமைப்பு தொடங்கியது. இதற்கிடையே, அரசு தரப்பில் காலையில் பள்ளி மாணவர்களுக்கு பால், வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு முட்டை ஆகியன தரப்படுகிறது.

காலை உணவுத்திட்டம் என்ன ஆனது? - கடந்த காங்கிரஸ் அரசு 2020-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி, மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி பெயரில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கியது. ஆனால் இத்திட்டம் ஒரே ஒரு நாள் மட்டுமே நடந்தது. அதன்பிறகு நடைமுறையில் இல்லை.

புதுச்சேரி, காரைக்காலை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் அரசு பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் அமலாகியுள்ள நிலையில் புதுச்சேரியில் இத்திட்டம் நடைமுறையில் இல்லை.

சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், “அரசு பள்ளிகளில் பெரும்பாலும் ஏழை குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்துள்ள உணவு தேவை. பல குழந்தைகள் காலையில் சாப்பிடாமல்தான் வருகின்றனர். அவர்களுக்கு காலை உணவை தமிழகத்தைப் போல் தந்தால் உதவியாக இருக்கும்.

அரசு இலவசமாக பேருந்து வசதி செய்துள்ளது. மதிய உணவை தற்போது ‘அட்சய பாத்திரா’ அமைப்பினர் தருகின்றனர். மாலை சிறுதானிய சிற்றுண்டிக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சூழலில் காலை உணவு திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவது மிக அவசியம்.

2018-ல் அப்போதைய முதல்வர் நாராயணசாமியால் தொடங்கி
வைக்கப்பட்டு, ஒருநாள் நடைமுறையில் இருந்த காலை உணவுத் திட்டம்.
(கோப்பு படம்)

இதை அரசோ அல்லது அரசு வழிகாட்டுதலின் பேரில் தன்னார்வ அமைப்பினர் மூலமோ செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கின்றனர். இதைத்தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாலை வேளையில் சிறுதானிய சிற்றுண்டி திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு எடுத்தது.

இதற்காக பள்ளிக்கல்வித்துறை மூலம் கோப்பு தயாரிக்கப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதற்கான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை கடந்தாண்டு நவம்பர் 25-ம் தேதி ஒப்புதல் அளித்தார்.

‘பள்ளி முடிந்தவுடன் குழந்தைகள் வீட்டுக்குச் செல்லும் முன்பாக அவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டியான சுண்டல், கடலை உள்ளிட்டவை தரப்படும்’ என அப்போது தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் டிசம்பரில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஒப்புதல் அளித்து 40 நாட்களாகியும் திட்டம் தொடங்கப்படவில்லை.

85 ஆயிரம் மாணவர்களுக்காக.. இதுதொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, சிறுதானிய சிற்றுண்டி திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் 50 ஆயிரம், காரைக்காலில் 15 ஆயிரம், மாஹேயில் 2,800, ஏனாமில் 4,400 என மொத்தம் 72,200 பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களையும் சேர்த்தால் 85 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர்.

சராசரியாக இத்திட்டத்தில் மாணவர் ஒருவருக்கு 6 ரூபாய் செலவாகும். ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை செலவிட அரசு முடிவு எடுத்துள்ளது. முதல்கட்டமாக வாரத்தில் இரு நாட்களுக்கு மாலை வேளையில் இந்த சிறுதானிய சிற்றுண்டி தர திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது. என்று தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x