Published : 03 Jan 2024 04:40 PM
Last Updated : 03 Jan 2024 04:40 PM

சென்னை ஐஐடி மாணவர்கள் நடத்தும் 25-வது ஆண்டு தொழில்நுட்பத் திருவிழா - 110 நிகழ்வுகளுக்கு ஏற்பாடு

செய்தியாளர் சந்திப்பில் வி.காமகோடி

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக மாணவ-மாணவிகள், 25-வது ஆண்டு சாஸ்த்ரா தொழில்நுட்பத் திருவிழாவை நடத்துகின்றனர். இந்தியாவிலேயே மாணவர்களால் நடத்தப்படும் மிகப்பெரிய வருடாந்திர தொழில்நுட்ப-பொழுதுபோக்குத் திருவிழாவான இது இன்று முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "2047-ம் ஆண்டில் சூப்பர் பவர் பாரதத்தைக் காண புதுமைக் கண்டுபிடிப்புகள் முதன்மையானதாகும். இளம்கண்டுபிடிப்பாளர்கள் சந்தித்துக் கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும், போட்டியிடவும் ஏதுவாக தனித்துவமிக்க தளத்தை இதுபோன்ற தொழில்நுட்ப விழாக்கள் வழங்குவதால், தங்களின் கண்டுபிடிப்புகள் குறித்து மிக விரிவான மதிப்பீட்டை அவர்களால் பெற முடியும்" எனக் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் மொத்தம் 110 நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஏறத்தாழ 2,000 பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சாஸ்த்ராவின் முதன்மையான விரிவுரைத் தொடரில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் டாக்டர் கிரண்பேடி ஐபிஎஸ் உள்பட 12 புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி மெட்ராஸ் டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்யநாராயணா என்.கும்மாடி, "சாஸ்த்ராவின் 25வது ஆண்டு நிகழ்வின் ஒரு பகுதியாக பங்கேற்பாளர்கள், பேச்சாளர்கள், நீதிபதிகள் மற்றும் தொடர்புடைய அனைவரையும் எங்களது வளாகத்திற்கு அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதுமையும், உற்சாகத் துடிப்பும் இணைவதை இவ்விழாவில் நேரில் காணவிருக்கிறேன். போயிங்கின் ஏரோமாடலிங் போட்டி, பிளிப்கார்ட் கிரிட் 5.0 ரோபாட்டிக்ஸ் சேலன்ஞ் இறுதிப் போட்டி இதில் இடம்பெறவிருக்கின்றது. வரவிருக்கும் 5 நாள் திருவிழா மனதைத் தூண்டும், இணைப்புகளை உருவாக்கும், ஒத்துழைப்பை மேம்படுத்தும், புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்கு வழிவகுக்கும் என உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

சென்னை ஐஐடி இணைப் பாடத்திட்ட ஆலோசகர் பேராசிரியர் ஸ்ரீராம் வெங்கடாசலம் கூறும்போது, "நடப்பாண்டில் 34 வகையான போட்டிகளை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் நடைமுறையில் உள்ள நிஜவாழ்க்கைப் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து உண்மையான, புதுமையான தீர்வுகளைப் பெறும் தனித்துவமான வாய்ப்பு பங்கேற்பாளர்களுக்குக் கிடைக்கிறது. பங்கேற்பாளர்களுக்கு வகுப்பறைக்கு அப்பால் கிடைக்கக் கூடிய அனுபவங்களைப் பெறுவதே இந்நிகழ்வுகளின் நோக்கம். இதற்கு ஆதரவளித்த அனைத்து ஸ்பான்சர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகூறிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

ரோபாட்டிக்சில் ஆர்வமுள்ளவர்கள் பிளிப்கார்ட் கிரிட் 5.0 ரோபோடிக்ஸ் சேலன்ஞ் முதல் ரோபோ வார்ஸ் வரை அனைத்து வகையான காட்சிகளையும் காணலாம். போட்டித் திறன் கொண்டவர்களுக்காக ஏரோமாடலிங், புரோகிராமிங், டிசைன் மற்றும் கேள்வி-பதில் போன்றவற்றில் அதிக சவால்கள் இடம்பெற்றுள்ளன. 'என்விசேஜ் கிளப்' நடத்தும் ரிஃப்ளெக்டர் ஸ்ஃபெரா, க்ரூவ்-எ-கிராஃப், ஃப்ளாஷ் வேவ், டிரான் டான்ஸ், டெக் அம்பியன்ஸ் திட்டங்கள் உட்பட பல்வேறு நிகழ்வுகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இத்திருவிழாவையொட்டி, மின்னணு இசைமையம் வழங்கும் தொழில்நுட்ப-பொழுதுபோக்கு இரவில் சன்பர்ன் கேம்பஸ் மற்றும் லேசர் ஷோ இந்தியா ஆகியவை பங்கேற்கும்.

சென்னை ஐஐடி மாணவர் இணைப் பாடத்திட்ட விவகாரங்களுக்கான செயலாளர் நிதின் எஸ். கூறும்போது, "சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வோடு சாஸ்த்ரா அணி "ஃபர்கெட் மீ நாட்" என்ற பெயரில் மூளை பாதிப்பு நோய் குறித்த சமூக விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. தாக்கத்தை ஏற்படுத்தும் முன்னெடுப்புகள், விழிப்புணர்வு நிகழ்வுகள், கல்லூரி வினாடிவினா, போட்டி உள்ளிட்டவை மூலமாக மூளைநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்துவதை 'ஃபர்கெட் மீ நாட்" பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளன. புரிதல், இரக்கம் ஆகியவற்றை வளர்ப்பதன் மூலமும், பிரச்சாரம் போன்றவை மூலமும் அவர்களுக்கு ஆதரவான சமூகத்தை உருவாக்க முயல்கிறது" எனத் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி சாஸ்த்ரா 2024 பிரச்சாரப் பிரிவின் மாணவர் குழு உறுப்பினர் ஜோஷிக் ஸ்வரன் கூறும்போது, "மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஒளி-ஒலி அடிப்படையிலான நிகழ்ச்சிகளுக்கு சென்னை ஐஐடி-ன் தொழில்நுட்ப-பொழுதுபோக்கு கிளப்பான 'என்விசேஜ்' ஏற்பாடு செய்திருக்கிறது. ப்ராஜக்ட் 91, நினா சூர்டே, ஜூலியா பிளிஸ் மற்றும் லேசர் ஷோ இந்தியா அமைப்பின் நிகழ்வு ஆகியவற்றை சாஸ்த்ரா தொகுத்து வழங்கும்" எனக் குறிப்பிட்டார்.

சாஸ்த்ரா 2024-ல் ஒருபகுதியாக நடைபெறும் சில முக்கிய நிகழ்வுகள்:

Ø நெறிமுறைத் தொழில்நுட்ப மாநாடு - 3 நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச மாநாடு, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், அனுபவம்பெற விரும்புவோர், ஆர்வமுடையோர், தொழில்நிபுணர்களுக்கு ஒருங்கிணைப்பு, கருத்தாக்கம், வலையமைப்பு ஆகியவற்றுக்கான தளமாகவும், எதிர்காலத் தொழில்நுட்ப மேம்பாடு, மனிதாபிமான வழிகாட்டல்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பாகவும் அமையும்.

Ø என்க்ரிப்ட்கான் 2024 - இது சைபர் பாதுகாப்பு குறித்த 2 நாள் சர்வதேச ஆராய்ச்சி மாநாடாகும். ஜனவரி 6-ந் தேதி இந்த வளாகத்தில் தொடங்கும் மாநாட்டை சாஸ்த்ரா 2024 பெருமையுடன் நடத்துகிறது. சிறப்புவாய்ந்த இம்மாநாட்டின் தொடக்க அமர்வில், இணையப் பாதுகாப்பில் புகழ்பெற்ற பேராசிரியர் வி.காமகோடி பங்கேற்க உள்ளார்.

Ø விரிவுரைத் தொடர் - நடப்பாண்டின் முதன்மையான விரிவுரைத் தொடர் வரிசையில் ராம்நாத் கோவிந்த் (முன்னாள் குடியரசுத் தலைவர்), பழனிவேல் தியாகராஜன் (தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை அமைச்சர்), டாக்டர் கிரண்பேடி (புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர்) உள்பட புகழ்பெற்ற பலர் உரைநிகழ்த்துகின்றனர்.

Ø டெக்னோ நைட் அட் சாஸ்த்ரா - இத்திருவிழாவின் மின்னணு இசை நிகழ்ச்சியில் ப்ராஜக்ட் 91, நினா சூர்டே, ஜூலியா பிளிஸ் ஆகியவை இடம்பெறும். சாஸ்த்ராவின் டெக்னோ நைட் என்பது இசை நிகழ்ச்சியாக மட்டுமின்றி, தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்கின் ஒருங்கிணைப்பு அம்சமாக மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, இத்திருவிழாவின் தனித்துவ அடையாளத்தையும் உருவாக்கும். சாஸ்த்ராவில் இடம்பெற உள்ள 'லேசர் ஷோ இந்தியா'வின் லேசர் காட்சிகள் பிரமிக்க வைப்பதுடன் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும்.

முதல்நாளில், இஸ்ரோவின் புகழ்பெற்ற பேராசிரியரும் பத்மஸ்ரீ விருதுபெற்றவருமான டாக்டர் வி.ஆதிமூர்த்தி, பாராலிம்பிக் நீச்சல் வீரர் திரு. புனித் நந்தகுமார் ஆகியோருடனான அமர்வு, இரண்டாம் நாளில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்தின் முக்கிய உரை, தொடர்ந்து தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் உரையாடல், மூன்றாம் நாளில் பத்மவிபூஷன் விருது பெற்றவரும் UDCT முன்னாள் இயக்குநருமான டாக்டர் மன்மோகன் சர்மா பங்கேற்பு, தொடர்ந்து பத்மபூஷண் விருது மற்றும் போல்ட்ஸ்மான் பதக்கம் பெற்றவரான டாக்டர் தீபக் தருடன் உரையாடல்.

அதன்பின்னர் புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் டாக்டர் கிரண்பேடியுடன் மற்றொரு அமர்வு நடைபெறும். நான்காம் நாளில் வனவிலங்கு ஆய்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் உல்லாஸ்கரந்த், இயற்பியலாளரும் பத்மஸ்ரீ விருதுபெற்றவருமான ரோகிணி கோட்போல், கட்டுரையாளரும் எழுத்தாளருமான பழகும்மி சாய்நாத் ஆகியோர் கலந்து கொள்வார்கள். ஐந்தாம் நாளில் கணினி அறிவியலாளரும் பத்மஸ்ரீ விருதுபெற்றவருமான டாக்டர் சங்கமித்ரா பந்த்யோபாத்யாய், ஹட்சன் அக்ரோ நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகன் ஆகியோர் பங்கேற்கும் நிகழ்வுடன் நிறைவுபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x