Published : 31 Dec 2023 04:16 AM
Last Updated : 31 Dec 2023 04:16 AM
விழுப்புரம்: பள்ளியில் படிக்கும் போது, ‘என்ன படிக்க வேண்டும் - எதைப் படிக்க வேண்டும்’ என்ற விழிப்புணர்வு இல்லாமல் தான் படித்தேன்; பின்னர் இலக்கை நிர்ணயம் செய்து வெற்றியை அடைந்தேன் என்று சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல் தெரிவித்தார்.
விழுப்புரம் ரயில்வே பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில், ஒன்று கூடும் நிகழ்வு விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவரான இஸ்ரோவில் பணியாற்றும் சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல் முக்கிய நபராக பங்கேற்று, தன்னுடன் படித்தவர்களுடன் கலந்துரையாடினார். விண்வெளி அறிவியல் சார்ந்த அவரின் சாதனைகளை மற்றவர்கள் கேட்டறிந்தனர்.
இந்நிகழ்வில் சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல் பேசியது: நான் பள்ளியில் படிக்கும் போது சுமாரான மாணவராகத்தான் இருந்தேன். ‘10-ம் வகுப்பு தேர்ச்சி பெறுவேனா!’ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.
ஆசிரியர்கள் தந்த ஊக்கம்: என் ஆசிரியர்களை பார்க்கும் போது இன்றைக்கும் பயமாகவே உள்ளது. பல தருணங்களில், என் ஆசிரியர்கள் என்னை ஊக்கப் படுத்தியிருக்கின்றனர். சில ஆசிரியர்களின் வீடுகளில் நீண்ட நேரம் இருந்தது உண்டு. என் ஆசிரியர்கள் தான் எனக்கு ஒழுக்கத்தை கற்றுத் தந்தனர். 10-ம் வகுப்பு படித்து முடித்தவுடன் பாலிடெக்னிக் சேர்ந்தேன். அப்போதும், ‘என்ன படிக்க வேண்டும் - எதைப் படிக்க வேண்டும்’ என்ற விழிப்புணர்வு இல்லாமல் தான் படித்தேன்.
அதை முடித்து, பின் சென்னையில் பி.இ இரண்டாமாண்டு சேர்ந்தேன். அந்த பொறியியல் படிப்பில்தான் என் வாழ்க்கை என்ன என்பதை உணர்ந்தேன். அப்போதுதான் இஸ்ரோவில் பணிக்கு செல்ல வேண்டுமென்ற இலக்கை நிர்ணயித்தேன். சந்திரயான்-3ல் திட்ட இயக்கு நராக நிர்வாகம் என்னை நியமித்தது. உண்மை, உழைப்பு, ஒழுக்கம் இவற்றை மிக முக்கியமாக நான் கருதுகிறேன். அர்ப்பணிப்பு உணர்வாக பணியாற்றினால் அனைவரும் அவரவர் துறையில் வெற்றி பெற முடியும். நான் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு சென்றேன்.
சந்திரயான் - 3 திட்ட இயக்குநராக பொறுப்பெற்ற பின்பு, எனக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளதை உணர்ந்தேன். ‘என்ன செய்ய வேண்டும்?’ என்பதை திட்டமிட்டேன். சந்திரயான்- 2 ல் பெற்ற அனுபவம், சந்திரயான்-3 ல் பணியாற்றும்போது உதவியது. பூமிக்கும், நிலவுக்கும் சுற்றுச்சூழலில் மிக வித்தியாசம் உள்ளது. அதை முழுமையாக அறிந்து கொண்டோம். என்ன பிரச்சினைகள் ஏற்படும்?, அதற்கு தீர்வு காண்பது எப்படி? என்பதை முன்கூட்டியே கணித்தோம்.
எங்கள் திட்டத்தை அப்படியே நிறைவேற்றினோம். பல நாடுகள் இதில் முயற்சித்தும் வெற்றி பெறவில்லை. ரஷ்யா 11 முறை இதற்காக முயற்சி மேற்கொண்டது. ஜப்பான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இதில் தோல்வி கண்டன. நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எங்களை தொடர்ந்து கண்காணித்தது.
ஒன்று பட்டதால் வெற்றி: இந்த திட்டத்துக்காக 4 ஆண்டுகள் திட்டமிட்டு, செயலாற்றினோம். இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து வெளிப் படையாக பணியாற்றி இந்த திட்டத்தில் வெற்றி பெற்றோம். இத்திட்டத்துக்காக ரூ.650 கோடி செலவு செய்யப்பட்டது. இதில், ரூ.250 கோடி விண்கலத்துக்கான செல வாகும்.
ரோவர் செயலாக்கத்துக்காக பல சோதனைகளை மேற்கொண்டோம். அதே போல லேண்டரிலும் சோதனைகள் மேற்கொண்டோம். ரோவருக்கு நமக்கு உள்ளது போலவே கண்கள் உள்ளன. அது எடுக்கும் படங்களை ‘டவுன்லோட்’ செய்து, நமக்கு படங்களாக அனுப்பும். ரோவரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வது மிகுந்த சோதனையானது.
நமக்கு உள்ளது போல அங்கு சூரிய சக்தி நாள்தோறும் கிடைக்காது. நிலாவில் தொடர்ந்து 14 நாட்கள் பகலாகவும், 14 நாட்கள் தொடர்ந்து இரவாகவும் இருக்கும். பகலாக உள்ள 14 நாட்களில் அனைத்து பணிகளையும் முடித்தாக வேண்டும். இந்த நெருக்கடிகளை எதிர்கொண்டு, கூட்டு முயற்சியாக இதை செயல்படுத்தினோம் என்றுதெரிவித்தார்.
முன்னதாக விழுப்புரம் வந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்து வேலை விழுப்புரம் ஆட்சியர் பழனி வரவேற்று, நினைவுப் பரிசாக பயனுறு புத்தகங்களை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT