Published : 26 Dec 2023 07:01 PM
Last Updated : 26 Dec 2023 07:01 PM
புதுச்சேரி: "புதுச்சேரியில் வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் ஏப்ரலில் தொடங்கும். மே மாதம் விடுமுறை விடப்படும். இதர துறைகளில் மாற்றுப் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் இருப்பது தொடர்பான புகார் பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று என்று அம்மாநில கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். மேலும், புதுச்சேரியில் பெண் ஆசிரியர்கள் சுடிதார் அணிந்து வருவது தொடர்பாக முதல்வரோடு கலந்து பேசி உரிய முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தற்போது 10, 12-ம் வகுப்பு தவிர்த்து சிபிஎஸ்இ பாடத்திட்டம் உள்ளது. வரும் கல்வியாண்டில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ கல்வி வாரிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கான கல்வியாண்டு நாட்காட்டி, அரசாணையை அமைச்சர் நமச்சிவாயம் இன்று வெளியிட்டார். கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினி பெற்றுக்கொண்டார். இதன்பின் அமைச்சர் நமச்சிவாயம் கூறியது ''புதுச்சேரியில் 126 அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம்.
வரும் 2024-25-ம் கல்வியாண்டு 220 நாட்களை உள்ளடக்கியது. இதற்கான பள்ளி செயல்படும் நாட்கள் குறித்த நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்புகள் சிபிஎஸ்இ பாடத்திட்டமாக மாற்றப்பட்டு, வரும் காலங்களில் 1 முதல் 12 வகுப்பு வரை முழு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும். சிபிஎஸ்இ பாடத்திட்டப்படி இனி ஏப்ரலில் இருந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கும். பொது விடுமுறை மே மாதத்தில் இருக்கும். அதையடுத்து ஜூனில் தொடங்கப்படும். 1 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கட்டாயமாக இருக்கும்.
தமிழகத்தில் பெண் ஆசிரியர்கள் சுடிதார் அணிந்து வரலாம் என அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் ஆசிரியர்கள் சுடிதார் அணிந்து வருவது குறித்து முதல்வரோடு கலந்து பேசி உரிய முடிவெடுத்து விரைவில் அறிவிப்போம்.
பிற மாநிலங்களைவிட புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளிலும் தேவையான வசதிகள் உள்ளன. குறைபாடுகள் குறித்து கவனத்துக்கு வந்தால் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து வசதிகள் செய்து தரப்படும். சமூக நலத்துறை மூலம் சைக்கிள் வழங்கப்பட்டது. தரமற்று இருப்பதாக புகார் வந்துள்ளது. இது குறித்து முதல்வர் விாரணை நடத்தி வருகிறார். வெகு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது. அதுபோல் புகார் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தவிர்க்கமுடியாத காரணங்களால் கல்வித் துறையில் 10 பேர் மட்டுமே டெபுடேஷன் அடிப்படையில் அலுவலகத்தில் பணிபுரிகின்றனர். கல்வித் துறை அலுவலக பணியில் இருப்பார்கள். 15 ஆண்டுக்கு பிறகு கலந்தாய்வு நடத்தி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கியுள்ளோம். பல ஆசிரியர்கள் டெபுடேஷன் அடிப்படையில் வேறு துறைகளில் இருப்பதாக புகார்கள் வருகிறது. இது குறித்தும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்கட்சிகள் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் நியமனம் என தவறான புரிதலோடு புகார் கூறுகின்றனர். புதுச்சேரியில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடக்கப் பள்ளியில் 145 காலிப்பணியிடம் நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்டு ஆய்வு நிலையில் உள்ளது. விரைவில் பணியாணை தரும் சூழல் உள்ளது. 300 பயிற்சி பெற்ற பட்டதாரிகள், 91 விரிவுரையாளர்கள், 40 மொழி ஆசிரியர்கள் உட்பட பல காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்தப் பணியிடங்களை நிரப்ப குறைந்தபட்சம் 3 மாதமாகிவிடும்.
மாணவர்களுக்கு கல்வித்தரம் குறையக் கூடாது, பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்பதற்காக ஓய்வு பெற்ற ஆசிரியர்களை இடைக்காலமாக நியமிக்க உள்ளோம். நிரந்தரமாக ஓய்வுபெற்ற ஆசிரியர்களை நியமிக்கவில்லை. ஆசிரியர் காலிபணியிடங்கள்முழுவதும் விரைவில் நிரப்பப்படும்.
புதுச்சேரியில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சிதான். அவர்கள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த எந்தவித தகுதியும் இல்லை. சுமார் 40 ஆயிரம் மீட்டர்களை காங்கிரஸ் அரசு பொருத்தியது. இப்போது மக்களை திசை திருப்ப நாடகமாடி காங்கிரஸார் போராட்டம் நடத்துகின்றனர். அவர்கள் கொண்டுவந்த திட்டத்தைத்தான் நாங்கள் தொடர்கிறோம். பிரீபெய்டு மின் மீட்டர் திட்டம் செயல்படுத்தினாலும் விவசாயிகளுக்கும், குடிசை வீடுகளுக்கும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT