Published : 23 Dec 2023 08:54 PM
Last Updated : 23 Dec 2023 08:54 PM
கள்ளக்குறிச்சி: திருநாவலூர் ஊராட்சிக்குட்பட்ட வாணம்பட்டு ஊராட்சியில் கட்டிட கட்டுமான தாமதத்தால், ஆட்டுக் கொட்டகையில் இயங்கி வருகிறது அங்கன்வாடி மையம் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாணம்பட்டு ஊராட்சியில் 25 குழந்தைகளுடன் அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஊராட்சியில் ஏற்கெனவே இருந்த அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்தததால், கடந்த 3 ஆண்டுகளாக மகளிர் திட்ட அலுவலகப் பகுதியில் இந்த அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது.
இதனிடையே, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மூலம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி பலமுறை கோப்புகள் அனுப்பப்பட்டன. ஆனால், அதற்கான இடத்தை தேர்வு செய்யாமல் தாமதப்படுத்தி வந்துள்ளனர். இருப்பினும் 2 ஆண்டு கால போராட்டத்துக்குப் பின், ஊராட்சியில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான கட்டிட ஒப்பந்தம் கோரப்பட்டு, கடந்த ஓராண்டாக மந்தகதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே மகளிர் திட்ட அலுவலகம் சேதமடைந்ததால், அதற்கான புதியக் கட்டிட கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது.
இதனால் அங்கு செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிராம சேவை மையக் கட்டிடத்தில் இந்த அங்கன்வாடி மையத்தை மாற்ற அதன் ஊழியர் முயல, வாணம்பட்டு ஊராட்சித் தலைவரும், செயலரும் அங்கு இடம் தர மறுத்து விட்டனர். இறுதியில் பாதுகாப்பற்ற பகுதியில் உள்ள ஒரு ஆட்டுக் கொட்டகையில் தற்காலிமாக செயல்படுகிறது வாணம்பட்டு ஊராட்சி அங்கன்வாடி மையம். அங்கு தெருநாய்கள் சூழ, 25 குழந்தைகளுடன் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.
கிராம புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிறு குழந்தைகளுக்கு குடும்பச்சூழல் காரணமாக சத்தான உணவு கிடைப்பது அரிது. அவர்களுக்கு சிறுவயதிலேயே சுகாதாரத்துடன் ஊட்டச்சத்து அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் விதமாக ஒவ்வொரு ஊராட்சியிலும் அதிகபட்சம் இரு அங்கன்வாடி மையங்களை அமைத்து சிறந்த உணவுகளை தர வேண்டும்; அதோடு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுத் தர வேண்டும் என்ற இலக்குடன் தமிழகம் முழுவதும் நீண்ட காலமாக அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.
அரசின் நோக்கத்தை சிதைக்கும் வகையில், சில ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் செயலர்களின் அலட்சியத்தால் இதுபோல அங்கன்வாடி மையங்கள் இயங்குகின்றன. வாணம்பட்டு அங்கன்வாடி மையம் தொடர்பாக திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதியை தொடர்புகொண்டபோது, “புதியக் கட்டிடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். நாங்கள் வேறு இடத்துக்குச் செல்ல அறிவுறுத்தியும், அங்கன்வாடி மைய பொறுப்பாளர், ‘பரவாயில்லை நாங்கள் இங்கேயே மையத்தை நடத்துகிறோம்’ என்று கூறி அங்கேயே இயக்கி வருகிறார். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT