Last Updated : 23 Dec, 2023 07:44 PM

2  

Published : 23 Dec 2023 07:44 PM
Last Updated : 23 Dec 2023 07:44 PM

கோவை வேளாண் பல்கலை. மாணவர்கள் நடத்தும் இலவச பாட சாலை - 69 ஆண்டுகளாக தொடரும் சேவை

சமுதாய நற்பணி மன்றத்தில் செயல்படும் மாலை நேர பாடசாலையில் பயிலும் பள்ளி மாணவர்கள்.

கோவை: சத்திரம், கோயில் முதலியவை கட்டுதலைவிட ஏழைக்குக் கல்வி புகட்டுதல் மேலானது என்றார் கல்வியின் சிறப்பை உணர்ந்த மகாகவி பாரதியார். எனவேதான், அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்; ஆலயம் பதினாயிரம் நாட்டல்; அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல் என்று பாடினார். அப்படி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கடந்த 69 ஆண்டுகளாக, தொய்வின்றி தொடர்ந்து மாலை நேர பாடசாலை மூலம் கல்வியை வழங்கி வருகிறது கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சமுதாய நற்பணி மன்றம். பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பண்ணைத் தொழிலாளர்களுக்கு கையெழுத்திட கற்றுக் கொடுக்க,பல்கலைக்கழக மாணவர் விடுதியில் கடந்த 1954-ம்ஆண்டு ஒரு சிறிய முயற்சியாக தொடங்கப்பட்ட இந்தமன்றத்துக்கு, 1970களில், தொழிலாளர்கள் அவர்களது குழந்தைகளையும் படிக்க அழைத்து வந்துள்ளனர்.

நாளடைவில் பண்ணைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்தபோதும், இந்த சேவையை நிறுத்தாமல், சுற்றுவட்டாரத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளி மாணவர்கள் பயிலும் பாடசாலையாக மாற்றியுள்ளனர். தற்போது சிறிய பள்ளிக்கூடம் போல இயங்கிவரும் இந்த பாடசாலையில் பல்கலைக்கழக மாணவர்களே ஆசிரியர்கள். தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை இங்கு வகுப்புகள் நடைபெறுகின்றன. இங்கு பயிற்றுவித்தவர்கள் மட்டுமன்றி, இங்கு பயின்ற மாணவர்கள் பலரும்தற்போது மத்திய, மாநில அரசு பணிகளில் உயர் பொறுப்புகளில் உள்ளனர். படிக்கும்போதே மாணவர்கள் மத்தியில் சேவை மனப்பான்மைக்கு வித்திட்டுவரும் இந்த சமுதாய நற்பணி மன்றம் குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.கீதாலட்சுமி கூறியதாவது:

இந்த பாடசாலையின் தேவை அதிகரித்ததால், தெலுங்குபாளையம் பகுதியிலும் அதேபோல பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர்களே பொது இடத்தை ஒதுக்கித் தந்தனர். இந்த பாடசாலையின் கிளையானது கடந்த 1989-ம் ஆண்டு முதல் அங்கு செயல்பட்டு வருகிறது. இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முனைவர்பட்டம் வரை பயிலும் மாணவர்கள் வரைதன்னார்வலர்களாக இந்த சேவையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 120மாணவர்கள் இவ்வாறு பணி யாற்றுகின்றனர். ஒன்றாம் வகுப்புமுதல் பிளஸ் 2 வரை தமிழ், ஆங்கிலவழியில் வகுப்புகள் நடைபெறுகின்றன. தற்போதுபள்ளி மாணவர்கள் 150 பேர் இங்கு பயின்று வருகின்றனர். அவர்களுக்கு அனைத்து பாடப்பிரிவுகளிலும் வகுப்புகள் நடைபெறுகின்றன.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சமுதாய நற்பணி மன்றம்.

ஆண்டுக்கு ஒருமுறை கல்வி சுற்றுலா: பாடங்களை தவிர்த்து, மாணவர்களின் தனித் திறன்களை வளர்க்கும் வகையில் கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகள், பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை இங்கு நடத்தப்படுகின்றன. ஆண்டுக்கு ஒருமுறை, மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்கான செலவுகளை பல்கலைக்கழகம் ஏற்றுக்கொள்கிறது. மேலும், ஆண்டுக்கு ஒருமுறை பல்கலைக்கழகத்தின் சமுதாயநற்பணி மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. பள்ளிகளில் நடைபெறுவதுபோல குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற அனைத்து முக்கிய விழாக்களுக்கும் இங்கு கொண்டாடப்படுகின்றன. அவ்வாறு முக்கிய நாட்களில் பல்கலைக்கழகத்தில் உள்ள பூச்சியியல் அருங்காட்சியகம், தாவரவியல் பூங்கா உள்ளிட்டமுக்கிய இடங்களுக்கு பள்ளி மாணவர்கள்அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இந்த சமுதாய நற்பணி மன்றமானது பல்கலைக்கழக மாணவர் நலமையத்தின் முதன்மையர் நா.மரகதத்தின்கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் கே.எம்.செல்லமுத்து, க.சிவசுப்பிரமணியன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். மன்றத்தின் செயலாளராக மாணவர்நிதிஷ்குமார், இணைச் செயலாளராக மாணவர் அருண் ஆகியோர் செயல்படுகின்றனர். மாணவர்களேதான்இந்த பாடசாலையில் நடைபெறும் அனைத்துநிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கின்றனர். பாடசாலையையும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு நாங்கள் ஆலோசனை மட்டுமே வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x