Published : 15 Dec 2023 05:45 PM
Last Updated : 15 Dec 2023 05:45 PM
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கத்தில் அமைந்துள்ளது அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் தற்போது 630 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 28 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வழக்கமான அரசு பள்ளிகளின் தோற்றத்தில் பள்ளிக் கட்டிடம், வளாகங்களுடன் இயங்கி வந்த இப்பள்ளி, தற்போது தனியார் பள்ளிகளை பின்னுக்குத் தள்ளும் வகையில் ஸ்மார்ட் வகுப்பறை, அறிவியல் பூங்கா, நீர் ஊற்றுடன் கூடிய மீன் அருங்காட்சியகம், இ-நூலகம், மூலிகைத் தோட்டம், சோலார் ஹீட்டர் என பல்வேறு வசதிகளுடன் புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. பள்ளியின் துணை முதல்வர் கருணாகரன் முன்முயற்சியினால் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பில் இது சாத்திய மாகி இருக்கிறது.
சுடுநீர் தரும் சோலார் ஹீட்டர்.பயனுறு மூலிகைச் செடிகள்.விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய அறிவியல் தீம் பார்க்.பள்ளியின் கட்டிடங்கள் மராமத்து செய்து வண்ணம் தீட்டப்பட்டு பளிச்சென காட்சி அளிக்கிறது. பள்ளிக்குள் நுழையும்போது இடது பக்கத்தில் 50-க்கும் மேற்பட்ட அறிவியல் கருவிகளை கொண்ட பிரமாண்டமான அறிவியல் பூங்கா (சயின்ஸ் தீம் பார்க்) உள்ளது. அதில் மாணவர்கள் விளையாடிக் கொண்டே சுலபமாக அறிவியல் பாடங்களை கற்றுகொள்ளும் வகையில் சுழலும் பெரிஸ்கோப், முள்துளை கேமரா, கியர் ரயில், மைய விலக்கு விசை, முப்பரிமாண ஊசல், நியூட்டனின் வண்ண வட்டு உள்ளிட்ட இயற்பியல் கருவிகள் மற்றும் டிஎன்ஏ மாதிரி, வேதியியல் தனிமை வரிசை அட்டவணை உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன.
இதேபோல் வலது பக்கத்தில் சோலார் ஹீட்டர் அமைக்கப்பட்டுள்ளது. அதில் எப்போது வேண்டுமானாலும் சுடுநீரை மாணவர்கள் பருகலாம். இதன் அருகிலேயே நீர் ஊற்றுடன் கூடிய மீன் அருங்காட்சியகம், மூலிகை பூங்கா உள்ளது. இவற்றில் விதவிதமான மீன்கள், மூலிகை செடிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. பள்ளியின் கிழக்கு பகுதி கட்டிடத்தில், புதுச்சேரியில் முதன்முறையாக 50 மாணவர்கள் ஒரே நேரத்தில் படிக்கும் இ-நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக் கென்றே கணித பூங்காவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டுமின்றி 100 செ.மீ அகல டி.வி திரை கொண்ட ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் என தனித்தனி ஆய்வு கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன.
பள்ளி முழுவதும் வண்ண மயமாகவும், பசுமையாகவும் மாற்றப்பட்டு மாணவர்களின் கல்வி மேம்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுதொடர்பாக பள்ளியின் துணை முதல்வர் கருணாகரன் நம்மிடம் கூறுகையில், “என்னுடன் கல்வி பயன்ற நண்பர்கள், முன்னாள் மாணவர்கள், இப்பள்ளியின் ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் பள்ளியை மேம்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கினேன். அதன்படி ரூ.15 லட்சம் செலவில் பள்ளி சீரமைப்பு, அறிவியல் பூங்கா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஒழுக்கம் குறித்து தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
எழுத்துப் பயிற்சி, தமிழ், ஆங்கிலத்தில் சரியான உச்சரிப்புடன் கூடிய வாசிப்பு பயிற்சியில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் குறிப்பிடும்படியாகவும், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் விதமாகவும் இப்பள்ளியை மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்களுக்கு ஷூ, ஐடி கார்டு உள்ளிட்டவைகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இது மாணவர்களுக்கு நன்கு பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. எளிமையாக கல்வி கற்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் நன்கு கல்வியறிவு பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT