Last Updated : 13 Dec, 2023 04:20 PM

 

Published : 13 Dec 2023 04:20 PM
Last Updated : 13 Dec 2023 04:20 PM

மேட்டூரை அடுத்த பாலமலையில் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம்

மேட்டூர் அருகே பாலமலை ராமன்பட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள் பகுதியில் மழைநீர் கசிந்துள்ளது.

மேட்டூர்: மேட்டூர் அருகே பாலமலையில், இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த பாலமலை ஊராட்சி ராமன்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 2009-ம் ஆண்டு ஊரக உட்கட்டமைப்பு திட்டத்தில் ரூ.2.50 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதில், 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. அங்கன்வாடி மைய வளாகத்திற்குள் மழை நீர் கசிகிறது. சுவர்களும் மழை நீரில் நனைந்து வலுவிழந்துள்ளன. மேலும், கட்டிடத்தின் மேல்பகுதியில் செடிகள் முளைத்துள்ளன. எனவே, வலுவிழந்த நிலையில் உள்ள கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மேல்பகுதியில் முளைத்துள்ள செடிகள்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த அங்கன்வாடி மையத்தில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். கட்டிடம் வலுவிழந்த நிலையில் இருப்பதால், மழைக் காலங்களில் நீர் கசிந்து வருகிறது. மேலும், கட்டிடம் இடிந்து விழும் நிலையிலும், ஜன்னல்கள் துருப்பிடித்தும், அந்தரத்தில் தொங்கியும் காட்சியளிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், மழைநீர் கசிந்து துர்நாற்றம் வீசியது. இதனால் குழந்தைகளை அனுப்ப முடியவில்லை. கட்டிடத்தின் மேல் பகுதியில் செடிகள் முளைத்து அசுத்தமாக காட்சியளிக்கிறது. கட்டிடம் சீரமைக்கப்படாததால், குழந்தைகளை அச்சத்துடன் அனுப்பும் நிலைதான்உள்ளது. அங்கன்வாடி மையத்தை சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும். இதுதொடர்பாக அதிகாரிகள் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x