Published : 12 Dec 2023 06:23 AM
Last Updated : 12 Dec 2023 06:23 AM

புயல் பாதிப்புக்கு பிறகு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு

சென்னையில் புயல் காரணமாக ஒரு வாரத்துக்கு பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு ஆர்வமுடன் வந்த சென்னை திருவல்லிக்கேணி, அண்ணா சிறுவர்கள் லேடி வெலிங்டன் அரசு பள்ளி மாணவர்கள். | படம்: ம.பிரபு |

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புயல் பாதிப்புக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. வெள்ள நீர் வடியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 4 அரசு பள்ளிகள் மட்டும் நேற்று திறக்கவில்லை. மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர் மழை காரணமாகவும், குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தை கருத்தில்கொண்டும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 4-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீரை வெளியேற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்காக அங்கு போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்நிலையில், புயல் பாதிப்புக்கு பிறகு, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளியின் செயல்பாடுகளை அமைச்சர்கள், அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர் விடுமுறைக்கு பிறகு, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு சென்றனர். மேலும், சென்னையின் புறநகர் பகுதியான பூந்தமல்லியில் வெள்ள நீர் இன்னும் வடியாததால் பள்ளி செல்லும் மாணவர்கள், படகுகள் மூலம் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பள்ளிகளுக்குள் புகுந்த வெள்ளநீர் வடியாத காரணத்தால் சென்னையில் 4 பள்ளிகள் நேற்று திறக்கப்படவில்லை. சென்னை போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை மாநகராட்சியின் வெட்டுவாங்கேணி, மதுரவாயல், திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் தொடக்கப் பள்ளிகள் ஆகியவை நேற்று திறக்கப்படவில்லை. அதேபோல, பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் போர்க்கால அடிப்படையில், மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால், போரூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாளை திறக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்ற 3 பள்ளிகளை இன்று திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x