Published : 11 Dec 2023 03:36 PM
Last Updated : 11 Dec 2023 03:36 PM
மதுரை: உலகம் அமைதி பெறவும், ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாகவும் காந்தியச் சிந்தனைகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரப்பி வருகின்றனர் மதுரையிலுள்ள காந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தினர். மதுரையிலுள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
காமராசர் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற இக்கல்வி நிறுவனத்தில் காந்திய சிந்தனை பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்பு, யோகாவில் பட்டயப் படிப்பு, முதுநிலை பட்டயப் படிப்பு, விழுமியக் கல்வியில் பட்டயப் படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. இக்கல்வி நிறுவனம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்திலுள்ள 15 கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கல்லூரி மாணவர்களிடையே காந்திய சிந்தனைகளை வளர்த்து சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட பணியாற்றி வருகின்றனர். காந்திய சிந்தனைகள் தொடர்பாக சர்வதேச அளவிலான கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் ரா.தேவதாஸ் கூறியதாவது: மகாத்மா காந்தியடிகள் பற்றி பள்ளி வரலாற்றுப் புத்தகங்களில் முழுமையாக இல்லை. எனவே அவரது கருத்துகளை பள்ளிகள், கல்லூரிகளில் கருத்தரங்குகளை நடத்தித் தெரிவித்து வருகிறோம். அதன் மூலம் தவறான வழியில் செல்லும் மாணவர்களை மடைமாற்றம் செய்து நல்வழிக்குக் கொண்டு வருகிறோம். காந்தியடிகள் சத்தியாகிரகம், சர்வோதயம் ஆகிய 2 கருத்துகளை உலகுக்குக் கூறியுள்ளார். வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. அது இன்னொரு வன்முறையை உருவாக்கும். சத்தியாகிரகம் என்பது வன்முறைக்கு மாற்றான ஒரு போராட்ட உத்தி. உண்மைக்காக குரல் கொடுப்பதும், அதன் மூலம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுமே சத்தியாகிரகம்.
சர்வோதயம் என்பது அனைவரின் நலன் சார்ந்தது. சமத்துவம் ஏற்பட வேண்டும், வறுமை நீங்க வேண்டும் என்றால் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும். பணக்காரன், ஏழை பாகுபாடு இருக்கக் கூடாது. அனைவரும் உழைக்க வேண்டும். உடல் உழைப்பு முக்கியம். உழைத்தால் பொருளாதாரம் மேம்படும். இதுதான் சர்வோதயம். இதுபற்றி வெளிநாடுகளில் நிறைய ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் ஏற்பட இன்று காந்தியம் தேவைப்படுகிறது. ஆண்டுதோறும் 1,000 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம். காந்தியின் இயற்கை மருத்துவம், இயற்கை வாழ்வியல் முறை, நடைப்பயிற்சி, மவுன விரதம், உண்ணாநோன்பு ஆகியவை குறித்து எடுத்துரைக்கிறோம்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் மாணவர்களுக்குக் கருத்தரங்கம், யோகா பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். தற்போது தகவல்தொழில்நுட்பத்துறையில் (ஐடி) பணியாற்றுவோர் பணம் முக்கியமில்லை, உடல் மற்றும் மன ஆரோக்கியம்தான் முக்கியம் என்பதை உணர்ந்து, காந்திய சிந்தனைகள், யோகா, இயற்கை மருத்துவம் ஆகியவற்றைக் கற்று வாழ்க்கையில் மாற்றத்தைக் கண்டு வருகின்றனர். காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலாளர் நந்தாராவ் வழிகாட்டுதலில் காந்திய சிந்தனைகளை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பரப்பி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT