Published : 08 Dec 2023 05:04 AM
Last Updated : 08 Dec 2023 05:04 AM
சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக என்.பெலிக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமனம்செய்வதற்காக கடந்த ஆகஸ்ட்மாதம் தேடல் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு சார்பில் 3 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவிக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து, மீன்வளப் பல்கலை. துணைவேந்தராக என்.பெலிக்ஸ்-ஐ நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.
ஏறத்தாழ 32 ஆண்டுகள் கல்விஅனுபவம் பெற்றுள்ள பெலிக்ஸ்,தற்போது மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், செயல் துணைவேந்தராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
முட்டுக்காட்டில் உள்ள மீன்வளர்ப்பு அடைகாத்தல் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய இயக்குநர், சென்னை மீன்வளக் கழகத்தின் முதுநிலைப் படிப்புகளுக்கான முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். பல்வேறு புத்தகங்களை எழுதியும், ஆய்வுக் கட்டுரைகளை தயாரித்தும் வெளியிட்டுள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி வலியுறுத்தி வருகிறார். இந்தவிவகாரம் காரணமாக, சென்னைபல்கலைக்கழகம் உள்ளிட்ட 3 பல்கலை.களில் துணைவேந்தர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.
மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம் பெறவில்லை. எனினும், அந்தக் குழு பரிந்துரைத்தவர்களில் ஒருவரை ஆளுநர் தேர்வு செய்துள்ளார். மீன்வளப் பல்கலைக்கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் (ஐசிஏஆர்) கீழ் வருகிறது. எனவே, அதற்கான துணைவேந்தர் தேடல் குழுவில் யுஜிசி பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT