Last Updated : 03 Dec, 2023 03:33 PM

 

Published : 03 Dec 2023 03:33 PM
Last Updated : 03 Dec 2023 03:33 PM

கோயில் தேர்களுக்கு பிரேக் - புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களின் புது முயற்சி!

படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: கோயில் தேர்களுக்கு பிரேக் கண்டறிந்துள்ளனர் புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்கள். அதை நிஜத் தேரில் பொருத்தி செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். கோயில் திருவிழாக்களில் தேர்கள் பயன்படுத்தப்படுவது வழக்கம். மரத்தால் செய்யப்பட்ட இந்த கோயில் தேர்களை பக்தர்கள் கைகளால் இழுத்துச் செல்வார்கள். பொதுவாக கோயில் தேர்களுக்கு பிரேக் கிடையாது. தேரை நிறுத்த வேண்டும் என்றால் பக்தர்கள் மரக்கட்டையைத்தான் உபயோகிப்பார்கள்.

தேருக்கு மிக அருகில் சென்று சுழலும் சக்கரங்களுக்கு எதிராக மரக்கட்டையை செருகி நிறுத்துவது ஆபத்தான நடைமுறை. மரக்கட்டைகள் தேரின் வேகத்தை குறைக்கவோ, நிறுத்தவோ கைமுறையாக பயன்படுத்தப்படுவதால் விபத்து நிகழ வாய்ப்புண்டு. அத்துடன் தேர்களின் சக்கர அச்சும் கடும் சேதமாகும். இயற்பியல் பாடத்தில் வரும் சுழல் மின்னோட்டத்தை இயற்பியல் ஆசிரியர் ஸ்ரீராம் விளக்கும் போது தேருக்கு சுழல் மின்னோட்ட பிரேக் வடிவமைக்கும் ஆவலை புதுச்சேரி முத்தரையர் பாளையம் இளங்கோ அடிகள் மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவர்கள் சஞ்சீவி, முத்து செல்வா இசக்கி ஆகியோர் தெரிவித்தனர்.

ஆசிரியர் வழிகாட்டுதல்படி இரு மாணவர்களும் 3 மாத காலமாக பள்ளியில் உள்ள அட்டல் டிங்கரிங் ஆய்வுக்கூடத்தில் உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தேருக்குஉராய்வற்ற பிரேக்குகளை உருவாக்கினார்கள். தேர் வடிவமைப்புக்கு பள்ளி நுண்கலை ஆசிரியர் இளமுருகன் வழிகாட்டினார். பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள் முன்பாக நேற்று முன்தினம் தேரை பிரேக்குடன் இணைத்து செயல்படுத்தி காட்டினர். இது பற்றி மாணவர்கள் சஞ்சீவி, முத்து செல்வா இசக்கி ஆகியோர் கூறியதாவது: சுழல் மின்னோட்ட பிரேக் அல்லது உராய்வற்ற பிரேக் வேகமாக செல்லும் ரயில்களிலும், ரோலர் கோஸ்டர்களிலும் பயன்படுகிறது. ஆனால் இதுவரை மெதுவாக நகரும் வாகனங்களுக்கு பயன்படுத்தப் படவில்லை. தேர் மெதுவாக நகரக்கூடியது.

உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நிலை காந்தங்கள், பல் சக்கரங்கள், டைமிங் பெல்ட், அனுமினியம் வட்டுத்தகடு ஆகியவைக் கொண்டு 24 வோல்ட் மின்துணையுடன் தேருக்கு பாரடேவின் தூண்டல் விதிகள், சுழல் மின்னோட்டம், லென்ஸ் விதி ஆகியவை பயன்படுத்தி தேருக்கு உராய்வற்ற பிரேக்கை வடிவமைத்தோம். தொடக்கத்தில் தோல்வியடைந்து, அதிலிருந்து கற்று மேம்படுத்தினோம். கோயில் தேர் சக்கரத்தின் அச்சு அமைப்பில் பல்சக்கரம் மற்றும் டைமிங் பெல்ட் இணைக்கப்பட்டுள்ளது. இது சாதாரணமாக தேர் சக்கரம் நகரும்போது அச்சில் இணைக்கப்பட்டிருக்கும். அலுமினியத்தால் ஆன 2 டிஸ்குகள், பல்சக்கரம் மற்றும் டைமிங் பெல்ட் உதவியுடன் வேகமாக அச்சை பற்றி சுழல வைக்கும்.

அலுமினியம் காந்தத்தால் கவரப்படாது. தேரில் பிரேக்கை பயன்படுத்தும்போது வேகமாக சுழலும் அனுமினிய டிஸ்குகளுக்கு எதிராக ஒரு சோலனாய்டு உலக்கை மற்றும் 24 வோல்ட் மின்சாரம் ஆகியற்றின் உதவியுடன் 2 செட் நியோடைமியம் நிலை காந்தங்களின் அடுக்கை நெருக்கமாக நகர்த்தும். இந்த காந்தங்கள் பாரடே மின்காந்த தூண்டல், சுழல் மின்னோட்டம், லென்ஸ் விதிப்படி சுழலும் சக்கரத்தின் இயக்கத்தை உராய்வில்லாமல் நிறுத்தும். இதனால் தேரின் வேகம் குறைந்து நிலை நிறுத்தப்படும். இது உராய்வு இல்லாத பிரேக். மென்மையான துல்லியமான கட்டுப்பாட்டை வழங்கும். இது பாரம்பரிய பிரேக் சிஸ்டம் போல் இருக்காது. சுழல் மின்னோட்ட பிரேக்குகள் நகரும் பகுதிகளுடன் தொடர்பு கொள்ளாது. அதனால் பாகங்கள் தேய்மானம் ஏற்படாது. பாதுகாப்பானது. என்றனர்.

இயற்பியல் ஆசிரியர் ஸ்ரீராம் கூறுகையில், “வகுப்பறை பாடங்கள் சமூகத்துக்கு பயனுள்ளதாக அமைய விரும்பினேன். அதன்படி தேருக்கு பிரேக் கண்டுபிடித்து மக்களுக்கு அர்ப்பணித்துள்ளோம். பாடம் நடத்தும்போது தேருக்கு பிரேக் அமைக்கும் யோசனை பள்ளி மாணவர்களுக்கு எழுந்தது. அதன்படி தான் படிப்படியாக இதை செயல்படுத்தினர்.

ஆகம விதிகளை மீறாமல் மோட்டார் வைக்காமல் செயல்படுத்தியுள்ளோம். நிஜ தேர் எடையும், உயரமும் அதிகம். அதற்கு தகுந்தாற்போல் உருவாக்க முடியும். நாங்கள் சிறு கல்விக்கூடத்தில் உள்ளோம். உயர் கல்விக் கூடத்தின் ஆலோசனையும் உதவியும் கிடைத்தால் நிஜத் தேருக்கும் வடிவமைப்பை நாங்கள் உருவாக்கலாம்” என்று குறிப்பிட்டார். இக்கண்டுபிடிப்பை புதுச்சேரி, தமிழக கோயில்களில் செயல்படுத்தும் யோசனையையும் இம்மாணவர்கள் வைத்துள்ளனர். அவர் களின் கனவு பலிக்கட்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x