Published : 01 Dec 2023 04:36 PM
Last Updated : 01 Dec 2023 04:36 PM
திருப்பூர்: 'நள்ளிரவிலும் விடாது கொட்டிக்கொண்டே இருக்கிறது சாரல் மழை. காடெங்கும் மழையின் ஈரம் வேர்விட்டு, சேறும், சகதியுமாக மாறிக் கிடக்கிறது. தூரத்தில் எரிகிறது ஒற்றை தெருவிளக்கு. அதன் கீழே நான்கைந்து நாய்கள் இரவிலும் உறங்காமல் சுற்றி வருகின்றன.
தேங்கி நிற்கும் நீரில் யானைகள் கூட்டம் வர, தெருநாய்கள் அவற்றை துரத்துகின்றன. யானை கூட்டத்தை நான்கு திசைகளிலும் சுற்றுகிறது நாய்கள் கூட்டம். தும்பிக்கையால் தெருநாய்களை விரட்ட, நள்ளிரவில் தூக்கம் கலைகிறது தளிஞ்சி கிராமம். இப்படித்தான் ஒவ்வொரு நாளும் இரவில் அந்த கிராமம் உள்ளது' என்கிறார் பட்டாம்பூச்சி குழு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் அ.சந்தோஷ்குமார். இவர், திருப்பூர் பாண்டியன் நகர் அரசுப் பள்ளி ஆசிரியர்.
பட்டாம்பூச்சி குழு அறக்கட்டளை பேருந்து வசதி அற்ற தமிழகத்தின் மலை கிராம பள்ளிகள் தொடங்கி, உண்டு, உறைவிடப் பள்ளிகள், மாணவர் சேர்க்கையில் அசத்தும் அரசுப் பள்ளிகள் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று மராமத்து பணிகள் தொடங்கி, வர்ணம் பூசி ஓவியம் வரையும் பணியை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழுதான், பள்ளி மேம்பாட்டுக்கான இந்த பணியை தன்னார்வமாக செய்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வர்ணம் பூசி, குழந்தைகள் விரும்பும் வண்ணமயமான சூழலாக மாற்றியுள்ளது.
பட்டாம்பூச்சி குழு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் அ.சந்தோஷ் குமார் தலைமையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களான ராஜு கிருஷ்ணன், பிரபு, ரவிச்சந்திரன், கார்த்திகேயன் ஆகியோர் இருசக்கர வாகனத்திலேயே திருப்பூரில் இருந்து தளிஞ்சி கிராமத்துக்கு சென்று இப்பணியை செய்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, “உடுமலைப்பேட்டை ஒன்றியம் தளிஞ்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி, ஆசிரியர் பக்ருதீன் அழைப்பின்பேரில், பட்டாம்பூச்சி குழுவானது பள்ளிக்கு வர்ணம் பூசி ஓவியம் வரைய திட்டமிட்டோம். திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளிக்கு பெயிண்ட் வாங்கி தரப்பட்டது. எங்கள் குழு இருசக்கர வாகனத்தில் அரைநாள் மலைக்காட்டில் பயணம் செய்து பள்ளிக்கு சென்றோம். வார விடுமுறையில் இந்த பணிகளை மேற்கொண்டோம்.
மழை பெய்து கொண்டே இருந்ததால், தொடர்ச்சியாக வர்ணம் பூச முடியவில்லை. இதையடுத்து கூடுதலாக மறுவாரம் 2 நாட்கள் சென்றோம். 4 நாட்கள் தங்கி இந்த பணியை முடித்தோம். பள்ளியிலேயே தங்கி வகுப்பின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் வர்ணங்கள் பூசி, மாணவர்களுக்கு பிடித்தமான சோட்டா பீம், டோரா போன்ற கார்ட்டூன் படங்களை வரைந்து கொடுத்தோம்.
வகுப்பின் உள்ளே, மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் கல்வி சார்ந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆங்கில எழுத்துகள், மனித உடல் உறுப்புகள் உள்ளிட்ட ஓவியங்களை வரைந்துள்ளோம். இப்பள்ளியில் 20 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி குழந்தைகளுக்கு புத்தாடைகள் நன்கொடையாக பெற்று, பட்டாம்பூச்சி குழு அறக்கட்டளை மூலமாக வழங்கப்பட்டது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT