Published : 28 Nov 2023 05:27 AM
Last Updated : 28 Nov 2023 05:27 AM
சென்னை: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் டிச.7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வரும் 2024-ம் ஆண்டு ஜன.7-ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 2,222 காலிப் பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ல் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரிகள், நவ.1 முதல் நவ.30-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய, விண்ணப்பதாரர்கள் கூடுதல் அவகாசம் கோரியிருந்தனர். இதையொட்டி விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி டிச.7-ம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால், டிச.8, 9 ஆகிய தேதிகளில் திருத்தம் செய்வதற்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் விண்ணப்பதாரர்கள் தங்களின் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை மாற்ற முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT