Published : 24 Nov 2023 05:08 AM
Last Updated : 24 Nov 2023 05:08 AM
சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) அடிப்படையில் நடத்தப்படுகிறது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே, கரோனா பரவல் காலத்தில் பள்ளி பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ வாரியம் கணிசமாக குறைத்தது. அதன்பிறகு இயல்பு நிலை திரும்பினாலும், குறைக்கப்பட்ட பாடத்திட்டமே தற்போதும் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது.
ஆனால், நீட் தேர்வுக்கு மட்டும் முழு பாடத்திட்டமும் கணக்கில் கொள்ளப்படுகிறது. இதனால், பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வைவிட, கூடுதல் பாடங்களை நீட் தேர்வுக்கு படிக்க வேண்டிய நிலை இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) குறைத்துள்ளது. அதன் விவரங்களை என்டிஏ நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. அதில், ‘பல்வேறு தரப்பின் கருத்துகளை ஏற்று, நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேதியியல், உயிரியல் பாடங்களில் கணிசமான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இயற்பியல் பாடத்தில் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்த முழுமையான தகவலை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படியே அடுத்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT