Published : 23 Nov 2023 04:29 AM
Last Updated : 23 Nov 2023 04:29 AM
சென்னை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான திறனறித் தேர்வு நவம்பர் 28-ல் தொடங்கி டிசம்பர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், மாநில மதிப்பீட்டுப் புலம் என்ற பெயரில் திறனறித் தேர்வுகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு தற்போது திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நவ.28 முதல் டிச.1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள் https://exam.tnschools.gov.in/ எனும் மாநில மதிப்பீட்டு புலம் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும். தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒருநாள் முன்பாக மதியம் 2 முதல் அடுத்த 23 மணி நேரத்துக்குள் அந்த வினாத் தாள்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். வினாத்தாள் பதிவிறக்கத்தில் சிக்கல் ஏற்பட்டால் 14417 என்ற உதவி மைய எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
ஒவ்வொரு தேர்வும் 40 நிமிடங்களில் நிறைவு செய்யத் தக்க வகையில் 25 கொள்குறி வகை வினாக்களை கொண்டிருக்கும். மாணவர்களுக்கு தனித்தனியாக அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அந்தத் தாள்களிலேயே மாணவர்களை குறிப்பிடச் செய்ய வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில் சார்ந்த தேதியில் நடத்த வேண்டும். தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்களை திருத்திவிட்டு, அதை வகுப்பு ஆசிரியர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT