Published : 17 Nov 2023 07:18 PM
Last Updated : 17 Nov 2023 07:18 PM
இயற்பியல், கணிதம் போல வேதியியல் பாடமும் அடிப்படையான அறிவியல் பாடங்களில் ஒன்று. அதில் ஆர்வத்தோடு படிப்பவர்களுக்கு நல்ல எதிர்காலமும் காத்திருக்கு. நம்மை சுற்றியும் நமது உடலுக்குள்ளும் சதா வேதியியல் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கும்.
நாம் சாப்பிடும் உணவு சத்துக்களாக மாறுவது, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அந்த நிலையை அடைவதற்கு எடுத்துக் கொண்ட மாற்றங்கள், இந்த உலகத்தில் உயிரினங்கள் தோன்றியது முதல் இன்று வரையிலான அதன் வளர்ச்சிகள் என சகலத்திலும் வேதியியல் ஒளிந்திருக்கிறது. எனவே வேதியியலை படிப்பதிலும் ஆராய்வதிலும் என்றைக்குமே தேவை குறையாது.
பலவிதமான வேதியியல் பிரிவுகள்: கெமிஸ்ட்ரி என்றதுமே பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி மட்டுமே பலருக்கும் நினைவுக்கு வரும். அதற்கு அப்பாலும் இளநிலை முதல் முதுநிலை மற்றும் ஆய்வு பட்டம் வரை ஏராளமான பிரிவுகளில் கெமிஸ்ட்ரியை படிக்கலாம். அப்ளைடு கெமிஸ்ட்ரி, பயோ கெமிஸ்ட்ரி போன்ற நன்கறிந்த வேதியியல் படிப்புகள் தொடங்கி விண்வெளி சார்ந்த ஆஸ்ட்ரோ கெமிஸ்ட்ரி, சூழலியல் சார்ந்த ‘என்விரான்மென்டல் கெமிஸ்ட்ரி’ என நவீன பிரிவுகளும் உள்ளன.
இளநிலை அறிவியல் மட்டுமன்றி பி.இ., பி.டெக்., என பொறியியலிலும் கெமிஸ்ட்ரியை எடுத்து படிக்கலாம். இயன்றவர்கள் ஆராய்ச்சி படிப்பு வரை முன்னேறுவது அவர்களது எதிர்காலத்துக்கு வலு சேர்க்கும். மற்றவர்கள் இளநிலை படிப்போடு அவசியமான முதுநிலை டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்புகளை முடிப்பது தகுதியை உயர்த்திக் கொள்ள உதவும்.
கெமிஸ்ட்ரி படிப்புக்கு கல்லூரி தேர்வில் கவனம் செலுத்துவது நல்லது. நல்ல ஆய்வக வசதி இதற்கான அடிப்படை தேவைகளில் முதன்மையானது. இளநிலையில் நல்ல மதிப்பெண் பெற்றால் முதுநிலையில் நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிலையங்களில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கும். இவை பெரும்பாலான மாணவர்கள் தற்போது விரும்பும் மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளைவிட உயர்வானது.
பள்ளி, கல்லூரி ஆசிரியர் பணிகள், போட்டித் தேர்வுகள் மூலம் மத்திய மாநில, அரசு பணிகள், குடிமைப் பணிக்குத் தயாராவது என அடிப்படையான வாய்ப்புகள் கெமிஸ்ட்ரி பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கும் காத்திருக்கின்றன.
இதற்கு அப்பால் மருத்துவம், விவசாயம், அழகு சாதனங்கள், மருந்தகம், ஆய்வகம், உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் பதப்படுத்தல் என்று ஆரம்பித்து ஏராளமான துறைகளின் வேலைவாய்ப்புகளிலும் தங்களுக்கானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
- எஸ்.எஸ்.லெனின் | ‘வெற்றிக் கொடி’யில் இருந்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT