Published : 16 Nov 2023 06:14 PM
Last Updated : 16 Nov 2023 06:14 PM
மதுரை: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு பல பெருமை உண்டு என்றாலும், தமிழ் படித்தால் தன்னம்பிக்கை உருவாகும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் மலர்விழி மங்கையர்கரசி. இவரது தந்தை திருவள்ளுவர் புகழ் பரப்பும் பணியை செய்யும் சுப.ராமச்சந்திரன். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் உயர்ந்து சேவை செம்மல் விருது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விருதுகளை மலர்விழி மங்கையர்கரசி பெற்றுள்ளார்.
இவரது கணவர் ஆதிராமசுப்பு மதுரை மாநகராட்சி கல்வித் துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மலர்விழி மங்கையர்கரசி மேடையில் சங்க இலக்கியங்கள் தொடர்பான சொற்பொழிவாற்றுவதோடு மட்டுமின்றி, ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார். ஒப்பியல் சமய நோக்கில் திருவருட்பா, அருட்பாவும் அருள் நூல்களும், மங்கையரின் மனம் மயக்கும் மருதாணி, சீவக சிந்தாமணி (நாடகம்), வளையாபதி (நாடகம்), உதயண குமார காவியம் (நாடகம்) உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல்வேறு நாளிதழ்களிலும், தேசிய கருத்தரங்குகளிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
கடந்த மே மாதம் கல்லூரி பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் தொடர்ந்து தமிழ்ப் பணி ஆற்றிவரும் மலர்விழி மங்கையர்கரசி கூறியதாவது: மதுரை எனது பூர்விகம். எனது தந்தை ராமச்சந்திரன் மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழ் வளர்க்கும் பணி செய்கிறார். மதுரை கேப்ரன்ஹால், திருநகர் சீதாலட்சுமி மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் படித்தேன். மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றேன். எனது தாயார் பள்ளி ஆசிரியையாக இருந்ததால், என்னை கல்லூரி பேராசிரியராக்க விரும்பினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றினேன். தமிழ் மீதான பற்றால் மலர்விழி என்ற எனது பெயரை மலர்விழி மங்கையர்கரசி என மாற்றினேன்.
பள்ளி, கல்லூரிகளில் படித்தபோதே மேடை பேச்சு, கதை, கவிதை வாசித்தலில் ஆர்வமுடன் பங்கேற்று பல பரிசுகளை பெற்றேன். குன்றக்குடி அடிகளார் முன்னிலையில் பட்டிமன்றத்தில் பேசி, அவரால் பாராட்டப்பட்டேன். இதனிடையே தந்தையுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்காடி வீதியிலுள்ள திருவள்ளுவர் கழகத்துக்குச் சென்று, அவருக்கு உதவியாக தமிழ் பணியாற்றி வருகிறேன். பெண்களுக்கு அறிவு, திறமை, எதையும் எதிர்கொள்ளும் சக்தி இருந்தால் ஆணாதிக்கம் பற்றிய சிந்தனையே தேவையில்லை. எத்தகைய தடை ளையும் எதிர்கொண்டு வெல்லலாம் என்பதை எனது மாணவிகளுக்கு தெரிவித்து ஊக்கப்படுத்தி வருகிறேன். வருங்கால தலைமுறையினர் பயன்பெறும் வகையில் நூல்களை எழுதி வருகிறேன். குறிப்பாக தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு உலகளவில் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT