Published : 30 Oct 2023 05:40 PM
Last Updated : 30 Oct 2023 05:40 PM
மதுரை: மதுரையில் இன்று பள்ளிக் கல்வித் துறை இயக்ககத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி கையேட்டை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். இதனை பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணை இயக்குநர் வெ.ஜெயக்குமார் ஆகியோர் பெற்றனர்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தலைமை பண்பு பயிற்சிகள் 2 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் பங்கேற்றவர்களின் அனுபவ பகிர்வை தொகுத்து அனைத்து ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு கையேட்டினை தயாரிக்க பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி 40-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 291 பக்க அளவில் தலைமை ஆசிரியர் கையேடு பள்ளிக்கல்வி இயக்ககத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இக்கையேட்டில் தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களின் பணிகள் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விளக்கமாக உள்ளது. மேலும், அலுவலக நடைமுறை பகுதியில் அலுவலகப் பணியாளர்களின் பணிகளும், கடமைகளும், பொறுப்புகளும் நிதி சார்ந்த நடைமுறை தகவல்களும் தரப்பட்டுள்ளன. மேலும் முதுகலை, பட்டதாரி, இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்களும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் செஞ்சிலுவைச் சங்கம், சாரணியர் இயக்கம், சுற்றுச்சூழல் மன்றம், இலக்கிய மன்றம், நூலக மன்றம், வானவில் மன்றம் உள்ளிட்ட பலவகையான கல்விசார் மற்றும் கல்வி இணைச்செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்களும் தரப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT