Published : 26 Oct 2023 12:12 PM
Last Updated : 26 Oct 2023 12:12 PM
புதுச்சேரி: தரமான மதிய உணவு தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பாகூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.
பாகூரில் உள்ள பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து பேரணியாக பாகூர் வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். அங்கு இந்திய மாணவர் சங்கத்தினர் வழிகாட்டுதலில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு மாணவர் சங்கத்தின் பாகூர் இடைக் கமிட்டி தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பாபு, சத்திய சீலன் முன்னிலை வகித்தனர். இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் பிரவீன் குமார் கண்டன உரையாற்றினார். இந்த போராட்டத்தின் போது, தரமற்ற சத்தில்லாத மதிய உணவை வழங்கும் ‘அக்ஷய பாத்ரா’ அமைப்புடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
மீண்டும் வாரத்தில் 3 நாட்கள் முட்டையுடன் கூடிய தரமான மதிய உணவை வழங்க வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இலவச லேப்டாப் வழங்க வேண்டும். சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை அனைத்து பள்ளிகளிலும் உறுதிப்படுத்த வேண்டும்.
புதுச்சேரியில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் துணை வட்டாட்சியர் விமலனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT