Last Updated : 18 Oct, 2023 11:28 AM

 

Published : 18 Oct 2023 11:28 AM
Last Updated : 18 Oct 2023 11:28 AM

ஆம்பூர் அருகே வார விடுமுறை நாட்களில் தற்காப்பு கலையை கற்று மாணவர்கள்!

தற்காப்பு கலையை கற்று வரும் மாணவர்கள்.

ஆம்பூர்: ‘ஆன்லைன்’ விளையாட்டில் மூழ்கியுள்ள மாணவர்களுக்கு மத்தியில் ஆம்பூர் அருகேயுள்ள கிராமப்புற மாணவர்கள் வார விடுமுறை நாட்களில் தற்காப்பு கலை பயிற்சியை எடுத்து வருவது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுக்கொல்லை கிராமம் ஆம்பூர் வனச்சரகம், நெக்னாமலை காடுகளின் அடிவாரத்தில் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டியுள்ள குட்டைமேடு வட்டத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சனி மற்றும் ஞாயிறுக்கிழமை போன்ற வார விடுமுறை நாட்களிலும் மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் தமிழர் கலைகளில் ஒன்றான சிலம்பாட்டத்தை கற்று வருகிறார்கள்.

இவர்களுக்கு, ஆம்பூர் அடுத்த கென்னடிகுப்பத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் இந்த தற்காப்பு கலை பயிற்சி அளித்து வருகிறார். இப்பகுதியில் உள்ள வயல்வெளிகளிலும், கோயில் வளாகம் போன்ற இடங்களில் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து மாணவர்கள் கூறும்போது, "வார விடுமுறை நாட்களிலும், அரசு விடுமுறை தினங்களை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கலைகளை கற்று வருகிறோம். இது எங்களுக்கு ஒரு வகை உடற்பயிற்சியாகவும் உள்ளது.

எந்நேரமும் பாடப் புத்தகமும், கையுமாக இருப்பதில் இருந்து புத்துணர்வு பெறவும், உடல் மற்றும் மனம் சோர்வு அடையாமல் இருக்க இந்த பயிற்சிகள் எங்களுக்கு ஒரு உத்வேகத்தை தருகிறது. தற்போது, நாங்கள் சிலம்பு பயிற்சி கற்று வருகிறோம். பின்னர், படிப்படியாக நாங்கள் தற்காப்பு பயிற்சிகளும் கற்றுக்கொள்ள உள்ளோம்.

தமிழர் கலைகள் என சொல்லிக்கொள்ள பல நூறு கலைகள் உள்ளன. பாரம்பரியமிக்க இந்த பழந்தமிழர் கலைகளை கற்றுக் கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது. இனிவரும் காலங்களில் நாங்கள் கல்வி கற்பதில் சாதனைகள் புரிவதோடு, இதுபோன்ற கலைகளை கற்றுக்கொண்டு இதிலும் சாதனை புரிய வேண்டும் என்பதே எங்களின் லட்சியம் ஆகும் " என ஆர்வத்துடன் கூறினர்.

தற்போதைய காலக்கட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்போன்களில் வீடியோ ‘கேம்’ போன்ற இளைஞர்களின் எதிர்காலத்தை வீணடிக்கும் விளையாட்டில் பலர் மூழ்கியுள்ள நிலையில், ஆம்பூரைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய மிக்க தற்காப்பு கலை பயிற்சியை விடுமுறை நாட்களில் கற்று பயனுள்ள வகையில் விடுமுறை நாட்களை கழிப்பது பெருமைக்குரியதும் என்றும், இது போன்ற நடைமுறை மாவட்டத்தின் பிற பகுதியிலும் ஏற்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x