Published : 18 Oct 2023 05:30 AM
Last Updated : 18 Oct 2023 05:30 AM
சென்னை: இளநிலை, முதுநிலை ஆராய்ச்சியாளர் உட்பட ஆராய்ச்சி திட்டங்களுக்கான உதவித் தொகையை யுஜிசி உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு:
கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு உதவித் தொகை திட்டங்களை மத்திய அரசு யுஜிசி வாயிலாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் ஆராய்ச்சித் திட்டங்களுக்கான உதவித் தொகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இளநிலை ஆராய்ச்சியாளர்களுக்கு (ஜேஆர்எப்) மாதந்தோறும் தரப்படும் உதவித்தொகை ரூ.31 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரமாகவும், முதுநிலை ஆராய்ச்சியாளர்களுக்கான (எஸ்ஆர்எப்) உதவித் தொகை ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.42 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, ஒற்றை பெண் குழந்தைகளின் ஆராய்ச்சி படிப்புக்கான சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே உதவித் தொகையும் ஜேஆர்எப் பிரிவுக்கு ரூ.37 ஆயிரம், எஸ்ஆர்எப் பிரிவுக்கு ரூ.42 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதுதவிர, டாக்டர் டி.எஸ்.கோத்தாரி முதுநிலை உதவித் தொகைத் திட்டத்தில் முதலாம் ஆண்டு ரூ.58 ஆயிரம், 2-ம் ஆண்டு ரூ.61 ஆயிரம், 3-ம் ஆண்டு ரூ.67 ஆயிரம் என்ற அளவில் மாதந்தோறும் அளிக்கப்படும்.
அதன் முழுமையான விவரங்களை www.ugc.ac.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment