Last Updated : 17 Oct, 2023 05:08 PM

1  

Published : 17 Oct 2023 05:08 PM
Last Updated : 17 Oct 2023 05:08 PM

பர்கூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் திறந்தவெளியில் சத்துணவு சமைக்கும் அவலம்

சமையல் அறை இல்லாததால், திறந்தவெளியில் சமைக்கப்படும் சத்துணவு.

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், அச்சத்துடன் பள்ளிக்கு மாணவர்களை பெற்றோர் அனுப்பி வருகின்றனர். மேலும், திறந்தவெளியில் சத்துணவு சமைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பர்கூர் ஊராட்சி ஒன்றியம் ஒப்பதவாடி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் குண்டியால்நத்தம்.இங்கு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் குண்டியால்நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து 65-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையோரம் பள்ளி உள்ளதால், சாலையில் அதிக அளவில் வாகனங்கள் செல்லும் நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் சாலையைக் கடந்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

பர்கூர் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள
குண்டியால்நத்தம் அரசு தொடக்கப் பள்ளி.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் பள்ளி உள்ளதால், பள்ளி நேரத்தில் மாணவர்கள் விவரம் தெரியாமல் சாலையைக் கடக்க முயன்றால், இச்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபரீதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

மேலும், பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், அச்சத்துடன் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். பள்ளியில் சமையல் அறையில்லாததால், திறந்தவெளியில் பாதுகாப்பற்ற முறையில் சத்துணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சிலர் கூறியதாவது:பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதேபோல, சத்துணவு சமையல் கூடம் அமைக்கவும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

நிறைவடையாத நிலையில் முடங்கிய புதிய வகுப்பறை
கட்டிடம் கட்டும் பணி.

ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் பள்ளியைச் சுற்றி தூண்கள் அமைத்து பசுமை வலை அமைத்திருந்தனர். அதையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதனால், தினசரி நாங்கள் எங்கள் குழந்தைகளை அச்சத்துடன் அனுப்பி வருகிறோம்.இதேபோல, பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியும் நிறைவடையாமல் முடங்கியுள்ளது.

எனவே, மாணவர்களின் நலன் கருதி, போர்க்கால அடிப்படையில் உடனடியாக பள்ளிக்குச் சுற்றுச் சுவர், சமையல் அறை கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x