Published : 16 Oct 2023 05:09 PM
Last Updated : 16 Oct 2023 05:09 PM
மதுரை: மணப்பாறை - பண்ணப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் பண்ணப்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்படுகிறது. இந்த இடம் கல்லூரி கட்டுவதற்கு உகந்த இடம் அல்ல. கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன்பு மண் பரிசோதனை நடத்தவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கின்றன.
மணப்பாறை அருகே செவலூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் கல்லூரி கட்டுவதற்கு வசதியான இடம் உள்ளது. இந்த இடத்தில் கல்லூரி கட்ட அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் வாதிடுகையில், ''மணப்பாறை, துவரங்குறிச்சி, வையம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் வசதிக்காக பண்ணப்பட்டியில் அரசு கல்லூரி அமைக்கப்படுகிறது. இங்கு சுமார் ரூ.15 கோடி மதிப்பில் 2 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கல்லூரியில் இருந்து 30 மீட்டர் தொலைவில் தான் உயர் அழுத்த மின் கம்பி செல்கிறது. இதனால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. இந்த மனுவில் பொதுநலன் இல்லை. தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ''இந்த மனுவில் பொதுநலன் இல்லை. அரசு கல்லூரி கட்டும் இடத்தை மாற்ற உத்தரவிட முடியாது. அரசு கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT