Published : 15 Oct 2023 04:04 AM
Last Updated : 15 Oct 2023 04:04 AM

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் பங்கேற்கும் 1,000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி வழங்கினார்

உதயநிதி ஸ்டாலின் | கோப்புப் படம்

சென்னை: ‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வு பிரிவு சார்பில், குடிமை பணிக்கான (யுபிஎஸ்சி) முதல் நிலை தேர்வில் பங்கேற்கும் 1,000 பேருக்கு ஊக்கத் தொகைக்கான வரைவோலையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

‘நான் முதல்வன்’ திட்டம்: 2023-24-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசு குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் 1,000 மாணவர்களை, மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து, முதல் நிலை தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வோர் மாணவருக்கும் மாதம் ரூ.7,500 வீதம், 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும், முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான குடிமைப் பணி முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு, இதுவரை 435 மாணவர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.1 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரம், முதன்மைத் தேர்வுக்கு தயாராவதற்கான ஊக்கத் தொகை யாக வழங்கப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வு பிரிவு சார்பில், மத்திய அரசின் முதல்நிலை தேர்வுக்கான உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு செப்.10-ம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதிலிருந்தும் 52,225 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 32,638 மாணவர்கள் ஊக்கத் தொகைக்கான தேர்வை எழுதினர். அத்தேர்வில் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு 10 மாதத்துக்கு ரூ.7,500 வீதம் என ஊக்கத் தொகை அரசால் வழங்கப்படும்.

போட்டித் தேர்வு: இதன் தொடர்ச்சியாக, யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வின் ஊக்க தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை ‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வுகள் பிரிவானது கடந்த மாதம் 10-ம் தேதி அரசுதேர்வுகள் இயக்ககம் மூலம் நடத்தியது. தேர்வு முடிவுகள் செப்.27-ம் தேதி வெளியான நிலையில், அக்.7முதல் அக்.10-ம் தேதி வரை சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு, 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், 1,000 மாணவர்களுக்கு முதல் மாத ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து, மாணவர்களுக்கு முதல் மாத ஊக்கத் தொகைக் கான வரைவோலையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநர் விக்ரம் கபூர், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தரேஷ் அகமது, தமிழக திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x