Published : 14 Oct 2023 11:01 AM
Last Updated : 14 Oct 2023 11:01 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகரம் தொழிலாளர் நிறைந்த நகரம். ஆண்டு முழுவதும் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பல லட்சம் செலவு செய்து கல்வி அளிக்க நினைக்கின்றனர். இதனால் ஆண்டுக்கு ஆண்டு தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், மாநகர், மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தி வருவது பெற்றோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக திருப்பூர் மாநகரை சேர்ந்த பெற்றோர்கள் கூறியதாவது: எங்கள் மகன், மகளை காலை 7மணிக்கு பள்ளிக்கு அனுப்பி வைத்தால், மாலை 7 மணிக்குதான் வீட்டுக்கு திரும்ப அனுப்புகின்றனர். 12 மணி நேரம் வகுப்புநடத்துகின்றனர்.
இது போதாதென்று சனி,ஞாயிறு, 2-ம் சனிக்கிழமை, பண்டிகை கால விடுமுறை, காந்திஜெயந்தி உள்ளிட்ட தேசிய விடுமுறை தினங்கள் என அனைத்துநாட்களிலும் பள்ளிகளை தொடர்ச்சியாக நடத்துவது, குழந்தைகளிடம் படிப்பு சார்ந்த ஆர்வத்துக்கு பதிலாக எதிர்வினை ஆற்றுவதை நேரில் பார்க்கிறோம். 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளை சேர்ந்த தனியார் பள்ளியில் பயிலும் பலருக்கும் இதே நிலைதான்.
அவிநாசி சாலை, பெருமாநல்லூர் சாலை என பல்வேறு பகுதிகளிலுள்ள பிரதான பள்ளிகள், குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக விடுப்பு அளிக்காமல் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இது ஒரு கட்டத்தில், பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மத்தியிலும் அயற்சியை உண்டாக்குகிறது. பள்ளி செயல்படும் நேரத்தில் ஆக்கப்பூர்வமாக கற்பிப்பதைவிட, கூடுதல் நேரம்ஒதுக்கீடு மற்றும் விடுமுறை நாட்களில் தொடர்ச்சியாக வகுப்புகள் வைப்பது, குழந்தைகளை மிகவும் வதைப்பதாகவே கருதுகிறோம்.
இதுதொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்ததால், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளிகள், இன்றைக்கு தொற்றுநோய்போல பல்வேறு இடங்களிலும் செயல்பட தொடங்கிவிட்டன.
தேசிய விடுமுறை தினங்களில் கூட பள்ளிகள் செயல்படுவது, பெற்றோரிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதை கல்வித் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து, குழந்தைகளை வதைக்காமல் கல்வி கொடுப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருப்பூர் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, “திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் இதுதொடர்பாக விசாரிக்கிறோம்” என்றனர்.
கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி கூறும்போது, "உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பள்ளி செயல்படும் நாட்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், சில தனியார்பள்ளிகள், ஞாயிற்றுக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்தி வருகின்றன. தனியார் பள்ளி வாகனங்கள் கூட ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகளை அழைத்து செல்லும் நிகழ்வுகளை பல இடங்களில் பார்க்கிறோம்.
ஆரோக்கியமான கல்விச் சூழலை மாநிலத்தில் ஏற்படுத்துவதே, எதிர்கால தலைமுறைக்கு நல்ல அரசு செய்யவேண்டிய பெரும் பணியாக இருக்கும். எனவே, இப்பிரச்சினையில், தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT