Published : 10 Oct 2023 05:17 AM
Last Updated : 10 Oct 2023 05:17 AM
சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும், கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களும் நாட்டுக்கு சேவை புரியும் வகையில் பல்வேறுஅரசுத் துறைகளிலுள்ள வேலைவாய்ப்புகளை அறியச் செய்யும் நோக்கிலும், மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டிடக்கலை ஆகியஉயர்கல்வி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் இணையவழி வெப்பினார் அக்.7, 8-ம் தேதிகளில் இணையம் வழியேநடைபெற்றது. இந்த நிகழ்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியும் இணைந்துள்ளது.
இந்த இணையவழி நிகழ்வை ஒருங்கிணைத்து கலந்துரையாடிய ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு பேசும்போது, ‘‘குடிமக்களின் அன்றாட பயணங்களுக்கு மட்டுமின்றி, தொழில்வளர்ச்சிக்கும், ராணுவ தளவாடங்களைச் சுமந்து செல்வதற்கும், பொருளாதார செழிப்புக்கும் இந்திய ரயில்வே துறை சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகிறது. குறுக்கும் நெடுக்குமாக தேசத்தை இணைக்கும் தண்டவாளங்களை, தேச அன்னையின் நரம்புகளாக நமக்கு நினைக்கத் தோன்றுகிறது.
குடிமக்களின் உயிர் காக்கும் மருத்துவப்பணிக்கான தேவை எப்போதுமே அவசியமான ஒன்று.அதிலும் கரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் மருத்துவர்களின் தேவையும் அர்ப்பணிப்பும் மிகவும் அதிகமாகவே இருந்ததைஅறிவோம். ரயில்வே மருத்துவதுறையிலும் பல வேலைவாய்ப்புகள் உள்ளன. அறிந்து, தெளிந்து, திட்டமிட்டு படித்தால் வெற்றியின் இலக்கு மிகவும் எளிதாகும்’’ என்றார்.
தென்னக ரயில்வேயின் உதவிதலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர் என்.பால்சாமி பேசியதாவது: கடந்த 2010-ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு பொறியியல் பட்டம் பெற்று, சாப்ஃட்வேர் பொறியாளராகப் பணியாற்றிவந்த எனக்கு, சிவில் சர்வீஸ் தேர்வில் பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. பிறகு நண்பர்கள் என்னபடிக்கிறார்கள், நாம் என்ன செய்யலாம் என்கிற தேடலில், எனக்கு நானே தேடலைத் தொடங்கி, இன்ஜினீயரிங் சர்வீஸ் தேர்வு இருப்பதைக் கண்டறிந்து அதற்கு என்னை தயார்படுத்தி, இன்று ரயில்வேயில் பணி செய்து வருகிறேன்.
பாதுகாப்புப் படைகளுக்கு அடுத்தபடியாக அதிகம் ஊழியர்களைக் கொண்ட துறையாக ரயில்வே துறை விளங்குகிறது. கிட்டத்தட்ட 12 லட்சம் தொழிலாளர்கள் ரயில்வேயின் பல துறைகளில் உயரதிகாரிகள் தொடங்கி, கடைநிலை ஊழியர்கள் வரையிலான பணிகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்திய ரயில்வே வெப்சைட்டில் ரயில்வே தொடர்பான தேர்வுகள் குறித்த அறிவிப்புகளைக் காணலாம். அதற்காக நாம் முயன்று திட்டமிட்டுப் படித்து,ரயில்வே துறையின் பல பிரிவுகளில் பணியாற்றலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை ரயில்வே ஹாஸ்பிடல் கூடுதல் தலைமை மெடிக்கல் சூப்பிரன்டென்ட் டாக்டர் சி.சந்தோஷ் பேசியதாவது: வீட்டில் ஒருவராவது அரசுப் பணிக்கு வர வேண்டும் என்கிற எனது தந்தையாரின் தூண்டுதலின் பேரில், மருத்துவ துறையைத் தேர்வு செய்தேன். மருத்துவம் படித்த பிறகு ராணுவத்திலும் பணிசெய்ய வாய்ப்பு கிட்டியது. ஆனாலும் பெற்றோரின் விருப்பம் காரணமாக நான் ரயில்வே மருத்துவ துறையில் பணியில் சேர்ந்தேன். காப்பாற்றவே முடியாது என்ற எண்ணத்தில் வரும் ஒரு நோயாளியைக்குணப்படுத்தி அனுப்பும்போது, ஒரு மருத்துவருக்கு ஏற்படும் மனநிறைவுக்கு நிகரானது எதுவுமில்லை. ரயில்வே மருத்துவ பணியில் நாடு முழுவதும் சென்று பணியாற்றக் கூடிய வாய்ப்பிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிறைவாக, நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதில்களை அளித்தனர்.
இந்த இரு நிகழ்வுகளையும் பார்க்கத் தவறியவர்கள் https://www.htamil.org/DKNPS02E05, https://www.htamil.org/DKNPS02E06 ஆகிய இணைப்பு களின் மூலமாகவும், அருகில் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தும் காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT