Published : 07 Oct 2023 06:00 AM
Last Updated : 07 Oct 2023 06:00 AM

சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் கோரி மாணவிகள் தர்ணா

சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணாத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவிகள் பள்ளி வளாகத்திற்குள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எஸ். குரு பிரசாத்

சேலம்: சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாகவும், இது குறித்து புகார் தெரிவித்தால், தலைமை ஆசிரியர் தங்களை மிரட்டுவதாகவும் கூறி, மாணவிகள் பள்ளி வளாகத்தில் திரண்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

பள்ளியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து மாணவிகள் கூறியது: பள்ளியின் குடிநீர் குழாயில் வழங்கப்படும் குடிநீர் அசுத்தமாக இருக்கிறது. அதில் சில நேரங்களில் புழுக்களும் வருகின்றன. இது குறித்து சில தினங்களுக்கு முன்னர் மாணவி ஒருவர் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். ஆனால், குடிநீரை தனது வீட்டில் இருந்து கொண்டு வந்து, புகார் தெரிவிப்பதாக மாணவி மீதே தலைமை ஆசிரியர் குற்றம் சாட்டி, அவரை கண்டித்தார்.

பள்ளியில் உள்ள கழிவறைகள் சரிவர சுத்தம் செய்யப்படுவதே கிடையாது. அசுத்தமான கழிவறையைப் பயன்படுத்த முடியாமல் மாணவிகள் அவதிப்படுகிறோம். பள்ளி வளாகத்தை ஒட்டி, நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் செயல்படுகிறது. இதனால், நாங்கள் பள்ளிக்கு வந்து செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. மேலும், பள்ளியை ஒட்டி நிறுத்தப்படும் பேருந்துகளில் அதிக சத்தத்துடன் ஒலிப்பான் பயன்படுத்தப்படுகிறது.

இதனால், வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை சரிவர கேட்க முடியாமல், பாடங்களை புரிந்து கொள்ள முடிவதில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றோம். ஆனால், நாங்கள் கூறிய எந்த பிரச்சினைக்கும் நடவடிக்கை எடுக்காமல், தலைமை ஆசிரியர் எங்களை கண்டித்து, மிரட்டுகிறார்.

ஆசிரியராக இருக்கும், தலைமை ஆசிரியரின் கணவரும் பள்ளிக்கு வந்து எங்களை மிரட்டுகிறார். எனவே, மாணவிகள் மீது அக்கறையின்றி செயல்படும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். மாணவிகளில் சிலர், பிரச்சினை குறித்து அச்சிடப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மாணவிகளின் குற்றச்சாட்டு குறித்து, செய்தியாளர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணி கூறுகையில், ‘ஆசிரியர்கள் சிலர் எனக்கு எதிராக மாணவிகளை தூண்டிவிட்டு, போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர். என் மீது வேண்டுமென்றே பொய் புகார்களை கூறுகின்றனர். பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன்’ என்றார்.

இதனிடையே, மாணவிகள் போராட்டத்தை அறிந்த சேலம் டவுன் போலீஸார், நேரில் வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் சந்தோஷ்குமார், மோகன், சேலம் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன் ஆகியோர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x