Last Updated : 03 Oct, 2023 04:10 PM

 

Published : 03 Oct 2023 04:10 PM
Last Updated : 03 Oct 2023 04:10 PM

கால்பந்தில் கலக்கும் கல்மண்டபம் அரசுப் பள்ளி மாணவிகள்: 25 கி.மீ தூரம் பயணித்து பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் அரசு உயர்நிலைப் பள்ளி மகளிர் அணி கால்பந்து விளை யாட்டில் சிறப்பிடம் பிடித்து வருகிறது. கிராமப் பகுதியில் உள்ள இப்பள்ளியில் கல்மண்டபம், பண்டசோழநல்லூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் கல்வியுடன் விளையாட்டிலும் சாதித்து வருகின்றனர்.

பள்ளி மாணவிகள் தரப்பில் கூறுகையில், “எங்கள் பள்ளி மாணவிகள் கால்பந்தில் சாதிக்கிறோம். புதுச்சேரியில் கால்பந்து போட்டிகள் நடந்தால் எங்கள் பள்ளி மகளிர் அணி தான் சிறப்பிடம் பிடிக்கும். புதுச்சேரி கால்பந்து அணியிலும் எங்கள் வீராங்கனைகள்தான் அதிகளவில் இடம் பெற்றுள்ளோம். அக். 5-ம் தேதி தொடங்கும் ஜெய்ப்பூர் ஜூனியர் நேஷனல் போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி அணியில் எங்கள் பள்ளியைச் சேர்ந்த 7 பேர் போட்டிக்கு சென்றுள்ளனர்.

மத்திய பிரதேசம் போபாலில் கடந்த ஜூனில் நடந்த தேசிய அளவிலான பள்ளி விளையாட்டி போட்டியில் புதுச்சேரி கால்பந்து அணி காலிறுதி வரை முன்னேறியது. இப்போட்டியில் பங்கேற்ற 18 பேரில் 12 பேர் எங்கள் பள்ளி வீராங்கனைகள்.

கடந்த 2022-ல் புதுச்சேரி கால்பந்து கழகம் நடத்திய பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டியில் எங்கள் பள்ளி மாணவிகள் மூன்றாம் இடம் பிடித்தனர். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் புதுச்சேரி கால்பந்து கழகம் கடந்தாண்டு நடத்திய 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் எங்கள் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்தனர். புதுச்சேரி மகளிர் கால்பந்து அணியில் அதிக இடம் பிடிக்கிறோம். உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன் நாள்தோறும் மாலையில் கால்பந்து பயிற்சி தருகிறார்.

இப்பள்ளி மாணவிகள் கால்பந்து போட்டியில் சாதிக்க பெற்றோர், ஆசிரியர்கள் உறுதுணையுடன் பயிற்சியாளர் வழிகாட்டுதல் முக்கியம். அதனால்தான் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெல்ல முடிகிறது. தேசிய போட்டிகளையும் குறிவைக்கிறோம். கல்வியோடு, விளையாட்டையும் இரு கண்களாக பாவிக்கிறோம்” என்றனர்.

இப்பள்ளியில் படித்து தற்போது கல்லூரியில் சேர்ந்து தொடர்ந்து கால்பந்தில் கலக்கும் சீனியர்கள் கூறுகையில், “கிராமத்தில் முதலில் கால்பந்து வந்தபோது ஷார்ட்ஸ் அணிந்து விளையாடுவது தான் முக்கிய பிரச்சினையாக இருந்தது. விளையாட்டை புரிந்து சாதிக்க தொடங்கிய பிறகு பெற்றோரும், ஊர்க்காரர்களும் ஊக்குவித்ததால் தான் பலரும் தேசிய போட்டிகள், வெளிநாட்டு போட்டிகள் வரை செல்ல முடிந்தது. குறிப்பாக, ஜெர்மன் பெர்லினில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இப்பள்ளி மாணவிகள் வித்யா, ஹேமாவதி ஆகியோர் பார்ட்னர் என்ற முறையில் பங்கேற்கும் வரை சென்றுள்ளோம். பதக்கமும் வென்றுள்ளோம்” என்றனர்.

இதுதொடர்பாக உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன் கூறுகையில், “நான் 2016-ல் உடற்கல்வி ஆசிரியராக கல்மண்டபம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். விளையாட்டு பள்ளியில் படித்தேன். கால்பந்து விளையாட்டில் எனக்கு ஆர்வம். பெண் குழந்தைகள் விளையாடும் கால்பந்து அணி புதுச்சேரியில் அப்போது இல்லை. அதனால் மாணவிகள் கால்பந்து அணியை உருவாக்க முயற்சித்தபோது தொடக்கத்தில் கஷ்டமாக இருந்தது. பின்னர் கால்பந்து பற்றி சொல்லி போட்டிகளை காட்டி விளையாட வைக்கத் தொடங்கினேன்.

அவர்களும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லத் தொடங்கினர். சிறிய கிராமத்தில் இருந்து தேசிய அளவிலான போட்டி களுக்கு செல்வது ஊக்கத்தை தந்தது. பள்ளி முடிந்தவுடன் கால்பந்து பயிற்சி தருவேன். கோடை விடுமுறையில் அனைத்து நாட்களும் பயிற்சி தருவேன்.

தினமும் பயிற்சிக்கு வந்துவிடுவார்கள். போதிய மைதானம் இல்லாததால் விடுமுறை நாட்களில் பயிற்சிக்காக நகரிலுள்ள ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி வந்து செல்வோம். சுமார் 25 கி.மீ தொலைவு இருந்தாலும் பஸ்சில் சொந்த செலவில் மாணவிகள் வந்து விடுவார்கள். காலை உணவு மட்டும் ஏற்பாடு செய்து விடுவோம். பள்ளி ஆசிரியர்களும், கிராமத்தினரும், பெற்றோரும் உறுதுணையாக இருப்பதால்தான் சாதிக்க முடிகிறது” என்றார் நம்பிக்கையுடன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x