Published : 03 Oct 2023 04:00 AM
Last Updated : 03 Oct 2023 04:00 AM
கோவை: தமிழ்நாடு விண் கற்கள் தேடுதல் திட்டத்தில் பங்கேற்க அரசுப் பள்ளி மாணவர்கள் குழுவாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய குடும்பம் தோன்றியதிலிருந்தே அதன் முக்கிய உறுப்பினராகப் பல கோடிக் கணக்கிலான சிறு கோள்கள் இருந்து வருகின்றன. சூரிய குடும்பத்தின் பல்வேறு இடங்களில் பரவிக் கிடக்கும் சிறு கோள்களானது, வெவ்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் பண்புகளை உடையவை ஆகும்.
உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் சிறு கோள்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த, சிறு கோள்களை (விண் கற்கள்) ஆராய்ந்து வகைப்படுத்துவதன் மூலம், அவற்றின் மோதலால் பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முடியும். உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் இவ்வாறு விண் கற்களை வகைப்படுத்தும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன.
சில மீட்டர்கள் முதல் சில நூறு கிலோ மீட்டர்கள் விட்டம் கொண்ட விண் கற்களைக் கண்டறிவது ஒரு சவாலான பணியாகும். இந்த பணியை தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக, ‘ஓபன் ஸ்பேஸ் பவுண்டேசன்’ அமைப்பின் உதவி அறிவியலாளர் கிரித்திகா கிருஷ்ணன் கூறியதாவது: தமிழ்நாடு விண் கற்கள் தேடுதல் திட்டம் மூலமாகப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு விண் கற்களைக் கண்டறிவதற்கான பயிற்சி பெறுபவர்கள் சர்வதேச அளவிலான விண் கற்கள் தேடுதல் நிகழ்ச்சியில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்று வருகின்றனர்.
இத்தேடுதல் திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, International Astronomical Search Collaboration (IASC) எனும் சர்வதேச அமைப்பு, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து, ஹவாயில் உள்ள பான்-ஸ்டார்ஸ் (PAN-STARRS) எனும் 1.80மீட்டர்விட்டமுடைய தொலைநோக்கியால் எடுக்கப்படும் படங்களை ஆன்லைனில் வழங்கும்.
இப்படங்களை, விண் கற்களின் நகர்வுகளைக் கண்டறிய உதவும் பிரத்யேக மென் பொருளின் உதவியுடன், மாணவர்களும், ஆசிரியர்களும் ஆராய்வார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட படங்களில் ஏதேனும் நகரும் பொருட்கள் இருப்பின், அவற்றை வகைப்படுத்தி மீண்டும் பான்-ஸ்டார்ஸ் வானியலாளர்களுக்கு மாணவர்கள் அனுப்பிவைப்பர்.
மாணவர்களும், ஆசிரியர்களும் கண்டறியும் விண் கற்களின் தடயங்கள், மேலும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, சர்வதேச வானியல் மையத்துக்கு அனுப்பப்படும். இவ்வாறு பல நிலைகளைக் கடந்து உறுதி செய்யப்படும் கண்டுபிடிப்புகளுக்கு மாணவர்களே பெயர் வைக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.
கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு விண் கற்கள் தேடுதல் திட்டம் மூலம், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 100 மாணவர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் என தமிழகம் முழுவதுமிருந்து 20 குழுக்களைப் பங்கேற்கச் செய்கிறோம். நடப்பாண்டுக்கான நிகழ்ச்சியானது அக்டோபர் 9-ம் தேதி தொடங்கி நவம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டு பங்கேற்கும் 20 தேடுதல் குழுக்களில் 14 குழுக்கள் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவை.
கடந்த ஆண்டு பங்கேற்ற குழுவினர் சுமார் 300-க்கும் அதிகமான விண்கற்களின் தடயங்களைக் கண்டறிந்தனர். அவற்றில் 98 தடயங்கள் விண் கற்களாக இருப்பதற்கான அதிகப்படியான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு அடுத்த கட்ட ஆய்வுக்கு விஞ்ஞானிகளால் உட்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக, விண்கற்கள் தேடுதல் திட்டம் 2024 ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது.
இதில், ஒரு பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள், ஒரு ஆசிரியர் குழுவாக பங்கேற்கலாம். மொத்தம் 20 குழுக்கள் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள் கூடுதல் விவரங்களை https://openspacefoundation.inஎன்ற இணையதளத்திலோ அல்லது9952209695 என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT