Published : 29 Sep 2023 04:12 PM
Last Updated : 29 Sep 2023 04:12 PM
சென்னை: தாம்பரம் அடுத்த மேற்கு ஊரப்பாக்கம் கணபதி அவென்யூவில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழலையர் பள்ளி விளையாட்டு மைதானத்தில் குட்டைபோல தேங்கியுள்ளது. சென்னை புறநகரில் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்று ஊரப்பாக்கம்.
ரயில் பாதையை தாண்டியுள்ள மேற்கு ஊரப்பாக்கம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், அடுக்குமாடி வீடுகள், தொழில் நிறுவனங்கள், கடைகள் உள்ளன. எந்நேரமும் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து உள்ள பகுதியாக இது உள்ளது.
இப்பகுதியில் சாட்சி பிள்ளையார் கோயில் அருகே இருப்பது கணபதி அவென்யூ. இங்கு உள்ள பிரதான சாலை அருகே மழலையர் பள்ளி விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதி முற்றிலும் கழிவுநீர் சூழ்ந்து குட்டைபோல மாறியுள்ளது. அருகே இருக்கும் பிள்ளையார் கோயில் தெருவில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இப்பகுதியில் குட்டைபோல தேங்குகிறது.
மழை பெய்யும்போது, மழைநீருடன் சேர்ந்து இந்த கழிவுநீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கணபதி அவென்யூ பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள மாமன்னர் அசோகர் குறுக்கு தெரு பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் தினமும் கழிவுநீர் பாயும் சாலையை கடந்துதான் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் மூக்கை பிடித்துக்கொண்டு கடந்து செல்கின்றனர்.
இதுகுறித்து கணபதி அவென்யூ பகுதியை சேர்ந்த எம்.தியாகராஜன் கூறியதாவது: கணபதி அவென்யூ கிழக்கு பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி கிடையாது. இதனால், அப்பகுதியில் உள்ள சில வீடுகளின் கழிவுநீர், எங்கள் பகுதியை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளது.
எந்நேரமும் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் எங்கள் பகுதியில் கிணற்று நீர், ஆழ்துளை கிணற்று நீர் மாசுபட்டு வருகிறது. குடியிருப்புகளுக்கு மத்தியில் குட்டைபோல கழிவுநீர் தேங்கியுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பல வீடுகளின் சுற்றுச்சுவர்கள் இடிந்துவிழும் நிலையில் உள்ளன.
கழிவுநீர் குட்டையில் கொசுக்கள், பாம்புகள், விஷப்பூச்சிகள் காணப்படுகின்றன. மழை பெய்யும்போது குட்டை நிரம்பி, சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால், வீரமங்கை வேலுநாச்சியார் தெரு, சிஎஸ்ஐ சர்ச் தெரு, மாமன்னர் அசோகர் குறுக்கு தெரு உள்ளிட்ட பகுதி மக்கள் சாலையில் சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், அலுவலகம் செல்வோர் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.
வார்டு கவுன்சிலரில் தொடங்கி, ஊராட்சி மன்ற தலைவர், எம்எல்ஏ, எம்.பி., மாவட்ட ஆட்சியர் என, முதல்வர் அலுவலகம் வரை இப்பிரச்சினையை கொண்டு சென்றுவிட்டோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கணபதி அவென்யூ கிழக்கு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்தால் மட்டுமே இப்பிரச்சினை தீரும். ஊரப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் இனியும் தாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT