Last Updated : 28 Sep, 2023 03:44 PM

 

Published : 28 Sep 2023 03:44 PM
Last Updated : 28 Sep 2023 03:44 PM

அண்ணாமலைப் பல்கலை. வேளாண் தொழில்நுட்ப தகவல் மைய புதிய விரிவாக்க முயற்சி ‘பசுமை புரட்சி’யை ஏற்படுத்துமா?

நாட்டு பாசுமதி சாகுபடிக்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூரில் நம்மாழ்வார் நினைவு வயல் வெளி செயல் விளக்க பண்ணையம் திறந்து வைக்கப் பட்டது.

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்புலம் தமிழகத்தில் தொடங்கப்பட்ட இரண்டாவது பழமையான வேளாண் கல்லூரியாகும். இக்கல்வி நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வேளாண் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகள் வாயிலாக மாநில மற்றும் தேசிய வளர்ச்சிக்கு துணைபுரிந்து வருகிறது.

நடைமுறை வேளாண் பிரச்சினைகளுக்கு ஆய்வுகள் வாயிலாக விவசாயிகளுக்கு புதிய தீர்வுகளை வழங்குவது, மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேளாண் திட்டங்களை பற்றிய விழிப்புணர்வை விவசாயிகள், விவசாய குழுக்களிடம் ஏற்படுத்துவது, வேளாண் மற்றும் தோட்டக் துறைகளில் புதிய ஆய்வுகள் வாயிலாக உருவாக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக புதுமைகள் (Annamalai University Innovation) போன்றவற்றின் வாயிலாக வேளாண் மற்றும் தோட்டக்கலை துறைகளின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை பெருக்குவது, விவசாயிகள் தங்களின் வேளாண் விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய உதவுவது போன்ற பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

தற்போது குறைந்த தண்ணீரை கொண்டு அதிகளவில் பயிர் சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் புதிதாக விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம் (Farmers Agricultural Technology Information Cell) தொடங்கப்பட்டு, விவசாயிகளுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.

தங்கள் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, கடந்த 2022 பிப். 14 அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ராம கதிரேசன், அப்போதைய வேளாண் புல முதல்வர் முனைவர் மு.சு.சுந்தர வரதராஜன் முன்னிலையில் தொடங்கப்பட்ட இந்த வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம் தற்போது பல புதிய விரிவாக்க முயற்சிகள் மற்றும் செயல் திட்டங்கள் வாயிலாக கடலூர் மற்றும் காவிரி பாசன பகுதி விவசாயிகள், கடலோர மாவட்ட விவசாயிகளுக்கு தனது விரிவாக்க சேவைகளை வழங்கி வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக நமது மாநில விவசாயிகள் பருவமாற்று பிரச்சினைகள் (Climate Change Issue) மற்றும் வேளாண் சந்தைகளில் விவசாய விளைப்பொருட்களின் விலை ஏற்ற இறக்க பிரச்சினைகளை அதிகப்படியாக சந்தித்து வருகின்றனர். உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்து விட்டாலும், ஊட்டச்சத்து குறைபாடுகள் (Malnutrition Deficiencies) பிரச்சினைகள் தொடர்கின்றன.

இத்தகைய விவசாயிகளின் நடைமுறை பிரச்சினைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் காணும் விவசாயிகளின் பங்களிப்புடன் கூடிய கள ஆய்வு மற்றும் புதிய விரிவாக்க முயற்சிகளை அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறது.

அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம் மற்றும் ஊரக வளர்ச்சி மையம் (Centre for Rural Development) ஆகியவை இதற்காக, வீர நாராயணன் வேளாண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துடன் இணைந்து ‘நாட்டு பாசுமதி’ (Native Basmati) என்ற நாட்டுப்புற ரகத்தில் புதிய வேளாண் மற்றும் விரிவாக்க கள ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுமார் 1.66 ஏக்கர் பரப்பளவில் நம்மாழ்வார் நினைவு நாட்டு பாசுமதி செயல் விளக்கப் பண்ணை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஒருங்கிணைந்த பண்ணைய விவசாய முறையை (Annamalai University Integrated Farming System) நாட்டு ரகங்கள் சாகுபடியில் பயன்படுத்துவதை செயல்படுத்தி, அதுதொடர்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு உரிய பரிந்துரைகளை அளித்து வருகிறது. மேலும், விவசாயிகள் சாகுபடி செய்து வரும் பல நாட்டு ரகங்களை ஆய்வு செய்து அவற்றை விஞ்ஞானரீதியாக வளர்த்து எடுக்கும் முயற்சிகளை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்துடன் (International Rice Research Institute, Philippines) உடன் இணைந்து ஈடுபட்டு வருகிறது.

இந்த புதிய விரிவாக்க முயற்சிகளில் இனி வருங்காலங்களில் வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், வேளாண் தொழில் தொடக்க நிறுவனங்கள் மற்றும் தொழில் மற்றும் வர்தக கூட்டமைப்புகளை இணைத்து செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வேளாண் புலம் தெரிவிக்கிறது. வளர்ந்த நாடுகளில் வேளாண் உற்பத்தி, அது சார்ந்த தொழில்நுட்பம் என்பது நடப்பு வேளாண் பணிகளுடன் இரண்டற கலந்திருக்கிறது. இதனால் உற்பத்தியின் சாதக பாதகங்கள் உடனுக்குடன் அறியப்படுகின்றன.

ஒரு வேளாண் புலமானது அவ்வாறு செயல்படும் போது வேளாண் சார்ந்த வளர்ச்சி உன்னதமாக இருக்கும். இதை உணர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண் தொழில்நுட்ப மையம் தொடர்ந்து செயல்பட வேண்டும்.நாட்டு பாசுமதி சாகுபடிக்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூரில் நம்மாழ்வார் நினைவு வயல் வெளி செயல் விளக்க பண்ணையம் திறந்து வைக்கப் பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x