Published : 22 Sep 2023 06:52 PM
Last Updated : 22 Sep 2023 06:52 PM

பாபநாசத்தில் ஆபத்தான நிலையில் ஆதிதிராவிடர் நலப் பள்ளி விடுதி: சீரமைக்க வலியுறுத்தல்

கும்பகோணம்: பாபநாசத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர் விடுதி கட்டிடத்தை சீரமைக்கவோ அல்லது புதிய கட்டிடம் கட்டவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாபநாசம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களிலுள்ள மாணவர்களின் வசதிக்காக 1979-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி 110 மாணவர்கள் தங்கி கல்வி கற்கும் வகையில் முதல் மாடியுடன் கூடிய அரசினர் ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர் விடுதி திறக்கப்பட்டு, தற்போது வரை செயல்பட்டு வருகிறது.

இந்த விடுதி கட்டப்பட்டு 44 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், விடுதியில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், கட்டிடங்களில் மரம், செடிகள் முளைத்துள்ளன. சுவரோரம் மற்றும் அறையின் மேற்புறத்திலுள்ள சிமென்ட் காரைகள் அவ்வப்போது பெயர்ந்து விழுந்து வருகின்றன. எனவே, மழைக் காலம் தொடங்கவுள்ளதையொட்டி, இந்த விடுதியை தற்காலிகமாகச் சீரமைப்பதுடன், விரைவில் புதிய கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதி மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கூறியது: பாபநாசம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நடுநிலைப் பள்ளிகள் மட்டும் இருந்ததால், அப்பகுதி மாணவர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் வசதியை ஏற்படுத்தும் விதமாக பாபநாசத்தில் அரசினர் ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர் விடுதி கடந்த 44 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த விடுதியில் போதுமான அளவில் மாணவர்கள் சேர்க்கை இருந்துள்ளது.

பாபநாசத்தில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர் விடுதி.
படம்: சி.எஸ்.ஆறுமுகம்

நாளடைவில் விடுதி கட்டிடத்தை பராமரிக்காததால், கட்டிடம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால், 110 மாணவர்கள் தங்கும் வசதியுள்ள இந்த விடுதியில் தற்போது 21 மாணவர்கள் மட்டுமே தங்கியுள்ளனர். இந்த விடுதி கட்டிடத்தில் மரங்கள் வளர்ந்துள்ளதுடன், மேற்கூரை சிமென்ட் காரைகள், தரைகளின் பூச்சும் பெயர்ந்துள்ளதால், இந்த கட்டிடம் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது.

இதனால், விடுதியில் உள்ள 21 மாணவர்களும் இங்குத் தங்கிப் படிப்பதற்கு அச்சப்பட்டு, மதியம் மட்டும் உணவருந்தி விட்டு வீட்டுக்குச் சென்று விடுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின்போது, விடுதியின் சமையல் கூடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால், தற்போது மாணவர்கள் பயன்படுத்தும் அறையே சமையல் கூடமாக செயல்படுகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த கட்டிடத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகத்தினர் கூறும்போது, ‘‘இந்த விடுதி மிகவும் மோசமாக இருப்பது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், கட்டுமானப் பொறியாளர்கள், அண்மையில் இந்த விடுதியை ஆய்வு செய்து சென்றுள்ளனர். அவர்கள் அளிக்கும் தகவலின்படி அடுத்தகட்ட முடிவெடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x