Published : 20 Sep 2023 05:47 AM
Last Updated : 20 Sep 2023 05:47 AM

விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’: செப்.23-ம் தேதி தொடங்குகிறது

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும், கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களும் நாட்டுக்கு சேவை புரியும்வகையில் பல்வேறு அரசுத் துறையிலுள்ள வேலைவாய்ப்புகளை அறியச் செய்யும் நோக்கில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் வெப்பினார் தொடர் நிகழ்வைக் கடந்த ஆண்டு நடத்தியது. இந்த நிகழ்வு ஏராளமான மாணவர்களுக்கு பயனளிப்பதாக அமைந்தது. அந்த வகையில் அரசுத் துறை வேலைவாய்ப்புகளோடு இந்த ஆண்டு மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டிடக்கலை ஆகிய உயர்கல்வி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் விஐடி சென்னை வளாகம் வழங்கும்‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் இணையவழி வெப்பினார் செப். 23-ம் தேதிதொடங்கி, ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் கலந்துரையாடலை ஒருங்கிணைக்கும் ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான வி.டில்லிபாபு கூறியதாவது; பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், பட்டதாரிகளுக்கு இந்திய ஆட்சிப்பணி, காவல், வருவாய், தபால், வனம், அயல் நாட்டுப் பணிகள், ராணுவ நுழைவுத் தேர்வுகள், இந்திய பொறியியல் பணி, ரயில்வே மேலாண்மைபணி, பொருளாதார - புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட தேசத்து குடிமக்களின் வாழ்வை செழுமைப்படுத்தும் ஒன்றிய அரசுப் பணிகள் பற்றிய நம்பகமான தகவல்களைத் தரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இது.

இந்த இணையத் தொடர் நிகழ்வில், அரசுப் பணிகளில் முத்திரை பதித்த ஆளுமைகள், தமது அனுபவங்களையும், தமது வெற்றிக்கான காரணிகளையும் நேரடியாக பகிர்ந்து கொள்வார்கள். பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிப்பர் என்றார்.

பிரகாசமான வேலைவாய்ப்பு: இந்த வெப்பினாரை வழங்கும் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் கூறியதாவது: மாணவர்களுக்கு நம் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரகாசமான வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த வாய்ப்புகளை அடைய சில வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக, எதை படித்தால் எந்த வேலைக்கு போக முடியும், எந்த படிப்பை படிக்க, எந்த நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்பனபோன்ற வழிமுறைகளை மாணவர்கள் தெரிந்துகொண்டால் வாழ்வில் எளிதாக முன்னேறலாம் என்றார்.

செப். 23-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள வெப்பினாரில், சென்னை வருமான வரி கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார், ஐஆர்எஸ் ‘இந்திய வருவாய் சேவைகளில் (IRS) வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்.

செப். 24-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள வெப்பினாரில், ஓசூர் வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி, ஐஎஃப்எஸ், ‘இந்திய வன சேவையில் (IFS) வாய்ப்புகள்’ எனும் தலைப்பிலும் உரையாற்ற உள்ளார். ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு இந்த இரு வெப்பினார் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து, மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x