Published : 15 Sep 2023 04:14 AM
Last Updated : 15 Sep 2023 04:14 AM
சென்னை: நாங்குநேரியில் தாக்கப்பட்ட பள்ளி மாணவருக்கு உயர்தர சிறப்பு சிகிச்சை அளிப்பதுடன், அவரது உயர் கல்விக்கான செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவரும், அவரின் சகோதரியும் சக மாணவர் களால் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இத்தகைய நிகழ்வுகளைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாங்குநேரி சம்பவம் தொடர்பாக பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கள ஆய்வு செய்து சில பரிந்துரைகளைத் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நாங்குநேரியில் தாக்குதலுக்கு உள்ளான மாணவருக்கு உயர்தர சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பை வழங்கி அவர் முழு உடல் திறனைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதேபோல், தாக்குதலின் போது மாணவரைக் காப்பாற்ற முயன்றதில் அவரின் சகோதரியும் காயம் அடைந்தார். அவருக்கு வீரதீர செயல் புரிந்த குழந்தைகளுக்கான உயரிய விருதை அரசு வழங்க வேண்டும். மாணவர்களைக் குற்றச் செயல்களில் ஈடுபடுத்த யாரும் இனி முயற்சி செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த விவகாரத்தில் தீர்ப்பு அமைய வேண்டும்.
ஊர்த் திருவிழாக்களில் சாதிய பெருமையைப் பறைசாற் றும் வகையிலான விளம்பரங்களை அனுமதிக்கக் கூடாது. இது தவிர பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் வளரும் சாதிய உணர்வுக்கும், அதிகரிக்கும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கும் பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளின் அலட்சியமே முக்கியக் காரணம். பள்ளிகளில் போதிய விழிப்புணர்வு செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவரின் உயர் கல்விக்கான செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்பதுடன், அவரின் தாயாருக்கு நிரந்தர அரசுப் பணி வழங்க வேண்டும். மேலும், மாணவர் பிளஸ்-2 பொதுத் தேர்வைச் சந்திக்க உள்ளதால் மருத்துவமனையில் இருந்தே படிப்பைத் தொடர வழிவகை செய்துதர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT