Published : 05 Sep 2023 06:24 AM
Last Updated : 05 Sep 2023 06:24 AM
சென்னை: மேலாண்மை கல்வித் துறையின் சிறப்பு எம்பிஏ பாடத்திட்டத்தில் ஆழ்ந்த கற்றல் தொடர்பான பாடத் தொகுப்பு புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாக சென்னைஐஐடி தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ஐஐடியின் மேலாண்மை கல்வித் துறையில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான சிறப்பு எம்பிஏ பாடத்திட்டத்தில் ‘சர்வதேசஆழ்ந்த கற்றல்’ என்ற புதிய பாடத்தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது. உலகளாவிய தலைமைத்துவமும், கலாச்சார நுண்ணறிவும்தான் இந்தசர்வதேச ஆழ்ந்த கற்றல் பாடத்தின் மையக் குறிக்கோளாகும்.
இதையொட்டி, முன்முயற்சியாக பெல்ஜியம் நாட்டிலும், பிரான்ஸ் நாட்டிலும் உள்ள அறிவியல் பொருளாதாரம் மற்றும்மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐஇஎஸ்இஜி) ஆழ்ந்த கற்றல் நிகழ்ச்சி 9 நாட்களுக்கு நடத்தப்பட்டது. இதில் சென்னை ஐஐடியின் 2023-24 சிறப்பு எம்பிஏ பாடத்திட்டத்தின் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
உலகளாவிய கலாச்சாரங்களை அறிந்து கொள்ளவும், ஐரோப்பா போன்ற சிக்கலான சமூக கலாச்சார அமைப்பைக் கொண்ட பிராந்தியத்தில் எவ்வாறு வணிகம் நடைபெறுகிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி ஒருவாய்ப்பாக அமைந்தது. மேலும்ஐரோப்பாவில் ஸ்டார்ட்-அப்நிறுவனங்களுக்கு வழிகாட்டு மையமாகத் திகழும் டெகத்லான் நகரத்தில் உள்ள கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தையும் மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
மேலாண்மை கல்வித் துறையின் சிறப்பு எம்பிஏ பாடத்திட்டமானது டிஜிட்டல் பொருளாதாரம், உலகளாவிய உத்திகள், வணிகத்துக்கான பகுப்பாய்வு, தொழில்துறையின் 4.0 தொழில்நுட்பம் போன்ற தொழில்துறைக்கு தேவையான களங்களில் கவனம் செலுத்துகிறது.
இந்த சிறப்பு எம்பிஏ பாடத்திட்டத்துக்கான மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் தற்போது சென்னை ஐஐடியில் பெறப்பட்டு வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக https://doms.iitm.ac.in/emba/ என்ற இணையதளத்தில் வரும் 19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT