Published : 04 Sep 2023 05:39 PM
Last Updated : 04 Sep 2023 05:39 PM

பகலில் மோர், மாலையில் தேநீர்... - அரசு வேலை கனவை நிறைவேற்றும் பசுமை படிப்பக வளாகம் @ மதுரை

காந்தி அருங்காட்சியகம் அருகே பசுமைப் பூங்காவில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள்.

மதுரை: பகலில் மோர், மாலையில் தேநீர் வசதியுடன் காற்றோட்டமான வட்ட வடிவ இருக்கைகள் கொண்ட பசுமைப் பூங்கா அமைத்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவுகிறார் மதுரை எம்பி சு.வெங்கடேசன். எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய, படிக்கும் காலத்தில் மட்டுமில்லாது படித்து முடித்த பிறகும் வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் போராட வேண்டிய சூழல் உள்ளது.

வசதி படைத்தோர் பயிற்சி மையங்களுக்குச் சென்று படிக்கின்றனர். ஏழை, நடுத்தர மாணவர்கள் போட்டித் தேர்வின் பாடத் திட்டங்களை மட்டும் அறிந்துகொண்டு கடந்த காலத்தில் அந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாத்தாள்களை வழிகாட்டியாக கொண்டு குழுவாக அமர்ந்து கலந்துரையாடிப் படிக்கின்றனர்.

மதுரையில் இப்படி மாணவர்கள் குழுவாக அமர்ந்து காந்தி அருங்காட்சியகம், மாநகராட்சி அலுவலகம், கே.கே.நகர் மாநகராட்சி பூங்கா போன்ற இடங்களில் விடா முயற்சியுடன் படித்து தற்போது பலர் அரசுப் பணிகளில் உள்ளனர்.

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் அரசு வேலைக் கனவை நிறைவேற்ற மதுரை எம்பி சு. வெங்கடேசனும் தோள் கொடுத்துள்ளார். அதற்காக அவர், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் காந்தி அருங்காட்சியகம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் இயற்கையான சூழலில் பசுமைப் பூங்காவை அமைத்தார். தமிழகத்திலேயே படிப்பதற்கு பூங்கா அமைக்கப்பட்டது இங்குதான்.

இந்தப் பூங்காவில் மாணவர்கள் அமர்ந்து கலந்துரையாடி படிக்கும் வகையில் வட்ட வடிவிலான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மழை பெய்தாலும் நனையாத வகையில் கூடாரமும் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள மரங்களைச் சுற்றிலும் சிமென்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவைச் சுற்றிலும் வெளியாட்கள் யாரும் உள்ளே வராத வகையில் கம்பிவேலி போடப்பட்டுள்ளது.

இங்கு படிக்க வரும் மாணவ, மாணவியர், இளைஞர்களுக்கு எம்பி.யின் ஏற்பாட்டில் தன்னார்வலர்கள் உதவியுடன் தினமும் காலையில் மோரும், மாலையில் தேநீரும் இலவசமாக வழங்கப்படுகிறது.மேலும், இங்கு குடிநீர், கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

சு.வெங்கடேசன் எம்பி

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்பி கூறிய தாவது: மதுரையில் மாநகராட்சி அலுவலக வளாகம் உட்பட பல்வேறு இடங்களில் போட்டித் தேர்வுகளுக்கு வெட்ட வெளியில் படித்துவரும் மாணவர்களைப் பார்க்கும் போதெல்லாம் இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நான் எம்பியான பிறகு அதற்கான முயற்சியை மேற் கொண்டேன்.

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கென்று தனியான படிப்பக வளாகம் ஒன்று உருவாக்க முடிவு செய்தேன். பல்வேறு வேலைகள், கரோனா பேரிடர் என பல நெருக்கடியான நிலையிலும் அதற்கான முயற்சியை எடுத்தேன். இப்படியொரு பூங்காவை சரியான இடத்தில் தேர்வு செய்து அதற்கான அனுமதியைப் பெற 2 ஆண்டுகள் ஆயின. அதைத் தொடர்ந்து நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ.50 லட்சம் திரட்டினோம்.

எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கினோம். முழுமையான பசுமை வளாகமாக அமைத்து திறந்தோம். இந்த வளாகத்தைப் பயன்படுத்திக்கொள்ள மாணவர்களிடம் இருந்த ஆர்வம் அளவிட முடியாதது. காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பசுமை வளாகத்தைத் திறந்து வைத்துப் பராமரிக்க வேண்டி உள்ளது.

இலவசமாக வழங்கப்படும் மோர், தேநீர். படங்கள்: நா.தங்கரத்தினம்

ரோட்டரி மிட் டவுன் கம்யூனிட்டி அறக்கட்டளை சார்பில், அதன் தலைவர் மதன் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள முன்வந்தார். இங்கு படிக்க வரும் மாணவர்களுக்கு தினமும் மாலையில் தேநீர் தருவதை தன்னார்வலர்கள் அருள், ஹரி மற்றும் அவர்களது நண்பர்கள் செய்து வருகின்றனர்.

காலையில் தென்புலம் அறக்கட்டளை சார்பில் கண்ணன், அருள், சிவா ஆகியோர் இலவசமாக மோர் வழங்குகின்றனர். பராமரிப்பில் வரும் கூடுதல் செலவினங்களை டிவிஎஸ் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் ஏற்றுள்ளனர். மழைக்காலத்தில் மாணவர்கள் வெளியில் அமர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளதால் தொகுதி மேம்பாட்டு நிதியில் கூடுதலாக ரூ. 30 லட்சம் ஒதுக்கி அடுத்தவாரத்தில் இருந்து கட்டுமானப் பணிகளை தொடங்க உள்ளோம்.

இதுதவிர, பசுமைப் பூங்காவில் டிஜிட்டல் நூலகம், வேறு சில கட்டமைப்புகளை உருவாக்க சிஎஸ்ஆர் நிதி மூலம் உதவிட ஓரிரு வங்கிகளை நாடியுள்ளேன். விரைவில் அவர்களும் தங்களது பங்களிப்பைச் செய்ய முன்வர உள்ளனர். அரசுப் பணியில் சேர நம்பிக்கையோடு உழைக்கும் மாணவர்களை மதுரை கைவிடாது என்பதன் அடையாளம்தான் இந்த `மாணவர் படிப்பு வளாகம்'.

முயற்சியைக் கைவிடாதீர்கள்; நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்; என்று சமூகம் மாணவர்களுக்குத் தோழமையோடு சொல்லும் திருத்தலமாக இந்தப் பசுமை படிப்பக வளாகத்தை நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x