Last Updated : 04 Sep, 2023 03:07 PM

 

Published : 04 Sep 2023 03:07 PM
Last Updated : 04 Sep 2023 03:07 PM

வடலூர் அருகே பழமையான நூலகத்துக்கு கட்டிடம் கட்டப்படுமா?

கருங்குழியில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கிளை நூலகம் இயங்கும் கட்டிடம்.

கடலூர்: வடலூர் அருகே கருங்குழி கிராமத்தில் உள்ள பழமையான நூலகத்துக்கு கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அக் கிராம பொதுமக்கள், மாணவ, மாண விகள் உள்ளனர். கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ளது கருங்குழி கிராமம். இந்தக் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் பாலிடெக்னிக், தனியார் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை உள்ளன.கடந்த 1858 முதல் 1867 வரை 9 ஆண்டுகள் வள்ளலார் கருங்குழியில் தங்கி வாழ்ந்து வந்தார்.

இங்கு அவர் 1865-ம் ஆண்டு 'சமரச வேத சன்மார்க்க சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கினார். இப்படி புகழ் பெற்ற இந்த கிராமத்தில் நூலகத் துறையால் கடந்த 1966-ம் ஆண்டு கிளை நூலகம் சிறிய பஞ்சாயத்து ரேடியோ அறையில் தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த 1997- ம் ஆண்டு ஊராட்சிமன்ற நிர்வாகத்தால் நூலகக் கட்டிடம் கட்ட தேவையான இடத்தை ஒதுக்கீடு செய்து, அதை நூலகத் துறை பெயரில், தான செட்டில்மென்ட் செய்து கொடுத்தனர். அந்த இடத்தில் நூலகத் துறை சார்பில் கட்டிடம் கட்டப்பட்டு நூலகம் இயங்கி வந்தது .

இது இக்கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வெளியுலக செய்திகள், பல்வேறு வரலாறுகளை அறிந்து கொள்ள உதவியாக இருந்து வந்தது. கடந்த 2020-ம் ஆண்டு அந்த நூலக கட்டிடம் வலுவிழந்து மேற்கூரை கான்கிரீட் பல இடங்களில் இடிந்து விழுந்தது. இதனால் நூலக கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து அதே ஆண்டு அப்பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி கட்டிடத்துக்கு நூலகம் மாற்றப்பட்டு அங்கு இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் 24 ஆயிரத்து 816 நூல்கள் உள்ளன. நூலகத்தின் உறுப்பினராக ஆயிரம் பேர் உள்ளனர். புரவலராக 14 பேர் உள்ளனர்.

கருங்குழி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும்
கிளை நூலகத்தில் உள்ள புத்தகங்கள்.

நாள் ஒன்றுக்கு 70-க்கும் மேற்பட்டவர்கள் நூல கத்துக்கு வந்து நாளிதழ்கள், நூல்களை வாசித்து செல்கின்றனர். சராசரியாக 25-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் நூல்களை வீட்டுக்கு எடுத்து சென்று படித்து வருகின்றனர். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நூலகம் இயங்குவதால் பள்ளியின் மதிய இடைவேளை நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த நூலகத்துக்கு வந்து நூல்களை வாசித்து செல்கின்றனர்.

கருங்குழி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்
உள்ள கிளை நூலகத்தில் மதிய இடைவேளை
நேரத்தில் நாளிதழ்கள்,புத்தகங்கள் வாசிக்கும் மாணவிகள்.

இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறுகையில், "பழமையான இந்த நூலகத்துக்கு இடம் இருந்தும் இதுவரை நூலகத் துறையால் அந்த இடத்தில் கட்டிடம் கட்டப்படவில்லை. பல முறை மாவட்ட ஆட்சியர், நூலகத் துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் கட்டிடம் கட்டப்படவில்லை. என்எல்சி நிறுவனத்தின் சுரங்க பகுதிக்கு அருகில் தான் எங்கள் கிராமம் உள்ளது.

என்எல்சி நிர்வாகம் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியில்(சிஎஸ்ஆர் நிதி) இந்த நூலக கட்டித்தை கட்டித் தர வேண்டும்" எனத் தெரிவித்தனர். "புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில் புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும்” என பாவேந்தர் பாரதிதாசன் நூலகங்களின் தேவையை வலியுறுத்துகிறார்.

வாசிப்பும், வாசிப்பின் வழியே உருவாகிற சிந்தனையும் நம்மைப் பொதுவான நிலையிலிருந்து விடுவித்து சிறப்பானதொரு மேம்பாட்டுக்குத் தூக்கிச் செல்கின்றன. "ஒரு நூலகம் திறக்கப்படும் போது,ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படு கின்றன" என்பது சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளில் ஒன்று. "நல்ல புத்தகங் கள் நல்ல கனவுகளை வளர்க்கும். நல்ல

கருங்குழியில் பழுதடைந்த நூலகக் கட்டிடம்
இடிக்கப்பட்டு கட்டிடம் கட்டப்படாமல் காலியாக உள்ள இடம்.

கனவுகள் நல்ல எண்ணங்களை உண்டாக் கும். நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உருவாக்கும்" என்பது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கருத்து. இப்படி பல அறிஞர்கள் நூலகத்தின் பெருமையை கூறியுள்ளனர். தமிழக பொது நூலகத்துறை உரிய நடவடிக்கை எடுத்து கருங்குழி கிராமத்தில் நூலக கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அக்கிராம மக்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x