Published : 26 Dec 2017 11:50 AM
Last Updated : 26 Dec 2017 11:50 AM
ஒ
ரு வழியாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவுக்கு, கட்சிகளுக்கிடையே ‘வாரி வாரி’ நடந்த பிரசாரம் என்ன, ‘வாரி வாரி வழங்கிய’ வாக்குறுதிகள் என்ன?
எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் சிறப்பான முறையில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. யார் ஜெயிப்பார் என்பதை விடவும், ஜெயித்தால் அவர் என்ன செய்வார், தொகுதிக்கு ஏதாவது நல்லது செய்யவிடுவார்களா என்பதே அந்தத் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதே எதிர்பார்ப்பு, போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் இருக்கவே செய்யும். ‘நாம் நினைத்ததுபோல எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமே’ என்ற பதற்றம், பரபரப்பு அவர்களை ஓரிடத்தில் நிலைகொள்ள வைக்காது.
ஆங்கிலத்தில் இப்படியான நிலையை வெளிப்படுத்துவதற்கு ‘Keep one’s fingers crossed’ என்று சொல்வார்கள். நாம் நினைப்பது மட்டுமல்லாமல், ‘உன் மனம் போல் எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்’ என்று இன்னொருவரை வாழ்த்தவும் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தலாம்.
இப்படியான வாழ்த்து, கடவுளிடமிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. அன்றைய இஸ்ரேல் தேசத்தில், வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னால், தங்களது சுட்டு விரலுக்கு மேலே, நடு விரலை வைத்து, நீதிபதிகள் ‘க்ராஸ்’ செய்வார்கள். அப்படிச் செய்துகொண்டே, ‘உன் மீது இறைவன் கருணை பொழியட்டும்’ என்று சொல்வார்களாம்.
அதாவது, தங்களது தீர்ப்பைவிடவும் இறைவனது தீர்ப்பே மேலானது என்பதை வலியுறுத்தவே இப்படிச் செய்வார்கள். தான் நல்லபடியாகத் தீர்ப்பு எழுதவும், யாருக்குத் தீர்ப்பு எழுதப்படுகிறதோ அவருக்கு நன்மை உண்டாகவும், இறைவனிடமிருந்து வாழ்த்து பெறும் செயலாக இவ்வாறு விரல்களை ‘க்ராஸ்’ செய்து வந்தார்கள். நாளடைவில், அந்தச் செயலைச் சாமானியர்களும் பின்பற்றத் தொடங்கினார்கள். அதிலிருந்து வந்ததுதான் மேற்கண்ட சொற்றொடர்.
இனி யாராவது உங்களிடம் ‘நம்ம கையில என்னப்பா இருக்கு?’ என்று சோகமாகக் கேட்டால், இந்த வாழ்த்தைச் சொல்லுங்கள். தேர்தலின்போது வாக்கு சேகரிக்க வந்தாலும் இந்த வாழ்த்தைச் சொல்லுங்கள். உங்களுக்கு ‘கை’ மேல் ‘பலன்’ கிடைத்தாலும் கிடைக்கும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT