Last Updated : 27 Aug, 2023 04:58 PM

 

Published : 27 Aug 2023 04:58 PM
Last Updated : 27 Aug 2023 04:58 PM

அரசு பள்ளி போல அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் சலுகைகள் கிடைக்குமா?

கடலூர்: அரசிடம் போதிய நிதி வசதியும், இடமும் இல்லை என்ற காலகட்டம் அப்போது இருந்தது. ஏழை ,எளிய மக்களுக்கு கல்வி புகட்ட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அப்போது செல்வந்தர்கள் பலரும் தமக்கு சொந்தமான இடங்களை இலவசமாக பள்ளிகளுக்கு எழுதி வைத்து,

அந்த இடத்தில் தமது சொந்த செலவில் வகுப்பறைக் கட்டிடங்களும் கட்டிக் கொடுத்து, அவர்களே ஆசிரியர்களுக்கு ஊதியமும் வழங்கி பள்ளியை நடத்தி வந்தனர். ஒரு கட்டத்தில், அரசே முன் வந்து, அந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ஊதியம் மட்டும் வழங்கி வருகிறது. இவ்வாறாக உருவானதுதான் அரசு உதவி பெறும் பள்ளிகள்.

1950-களுக்குப் பின், தமிழகத்தின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது இந்த அரசு உதவி பெறும் பள்ளிகள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது அரசு சார்பில் பல பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஆரம்ப காலங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகள் தான் ஏழை, எளிய கிராமப்புற மக்களின் கல்வித்தரத்தை உயர்த்தியது என்பது நிதர்சனமான உண்மை.

அரசு பள்ளிகள் இல்லாத ஒரு சில ஊர்களில் மாணவர்களுக்கு கல்வியறிவை அளிப்பதில் கிராமப்புற அரசு உதவி பெறும் பள்ளிகள் பெரும் பங்கு வகித்துள்ளது. அரசு - அரசு சார் என இரு வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமுக, பொருளாதார நிலை ஏறக்குறைய ஒரே நிலையில் தான் இன்று வரையிலும் உள்ளது.

இந்தச் சூழலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு அது ஏமாற்றத்தை அளிக்கிறது. அரசு மேல்நிலைப் பள்ளிகள் இல்லாத இடங்களில் பெற்றோர் பாதுகாப்பு கருதி தமது பெண் குழந்தைகளை அருகில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர்.

அந்தப் பள்ளிகளில் படிப்பதாலேயே இவர்களுக்கு பெண் கல்வி ஊக்கத் தொகை மறுக்கப்படுகிறது. “தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள காலை உணவுத் திட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதால், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஏழை,எளிய குழந்தைகள் பயனடைய வாய்ப்பில்லை. இது தவிர்க்கப்பட வேண்டும்” என்கின்றனர் பெற்றோரும், கல்வியாளர்களும்.

இது தொடர்பாக பேசிய தொழில் கல்வி கணினி ஆசிரியர் சங்க மாநில செய்தி தொடர்பாளர் ஆசிரியர் முத்துக் குமரன் கூறுகையில், “அரசு, அரசு உதவி பெறும் பள்ளி என்ற பாகுபாடு இன்றி அனைத்து குழந்தைகளையும் ஒருசேர பாவிக்கும் நிலைமையை தமிழக முதல்வர் ஏற்படுத்தி தர வேண்டும்.

அனைத்து குழந்தைகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் 7.5 சதவீத ஒதுக்கீடு கிடைக்காததால், அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2, முடித்த ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைப்பதில்லை. கல்லூரியில் படிக்கும் போது பெண் கல்வி ஊக்கத் தொகை இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

முதல்வர் உதவித்தொகைத் திட்டத்தில் தேர்வு எழுத பிளஸ் 1 மாணவர்களுக்கு அனுமதி அளித்தல், மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு உள்ளிட்ட அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும்” என்று கூறுகிறார்.

“இதுதொடர்பாக பலமுறை பள்ளிக்கல்வித் துறைக்கு மனுக்கள் அளித்துள்ளோம். ஆனாலும், அரசு உதவி பெறும் பள்ளிகளை இரண்டாம் நிலையிலேயே வைத்துள்ளது வருத்தம் அளிக்கிறது” என்று கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x