Published : 18 Aug 2023 04:05 AM
Last Updated : 18 Aug 2023 04:05 AM
புதுச்சேரி: 10 சதவீத உள்ஒதுக்கீடு கோப்புக்கு ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட் டுள்ளதால் புதுச்சேரியில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் காத்துள்ளனர்.
புதுச்சேரியில் சென்டாக் மூலம் நீட் அல்லாத தொழில்முறை படிப்புகள் மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல் சுற்று முடிந்து மாணவர்கள் சேர்க்கை ஆணை பெற்றுள்ளனர். இதேபோல் நீட் சார்ந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி.ஏ.எம்.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தாண்டு எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீடாக 370 இடங்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கிடையே கடந்த மாதம் 24-ம் தேதி முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதன் மூலம் அரசு பள்ளி மாணவர் கள் 37 பேருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொடர்ந்து அமைச்சரவையின் பரிந்துரை கோப்பு ஆளுநர் தமிழிசை ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோப்பை அனுப்பி வைத்தார்.
அந்த கோப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்தையும் புதுச்சேரி அரசு அனுப்பிவிட்டது. ஆனாலும் இதுவரை கோப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் புதுவை யில் மருத்துவப் படிப்புக்கான கலந் தாய்வு நடத்துவதில் தொடர்ந்து இழு பறி நீடித்து வருகிறது.
இது தொடர்பாக சென்டாக் அதிகாரிகளிடம் கேட்டபோது, “2023-24-ம் கல்வி ஆண்டுக்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வை அக்.10-ம் தேதிக்குள் முடித்து மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும். பொறியியல் படிப்புக்கு செப்.15-ம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடித்து மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டும். 10 சதவீத இடஒதுக்கீடு கோப்புக்கு ஒப்புதல் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் கலந்தாய்வு நடக்க வில்லை.
தற்போது நீட் தேர்வில் 400-க்கு மேல் மதிப்பெண் எடுத்த பல மாணவர்கள் பி.டெக் முதல் சுற்று கலந்தாய்வு மூலம் முன்னெச்சரிக்கையாக சேர்க்கை ஆணை பெற்றுள்ளனர். மருத்துவப் படிப்புக்கு காலதாமதமாக கலந்தாய்வு நடத்தும் போது, அந்த மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் பெறுவார்கள். அப்போது பொறியியல் கல்லூரியில் ஏற்படும் காலி இடங்களை நிரப்ப முடியாத நிலை உருவாகும்” என்றனர்.
அரசு வட்டாரங்களில் விசாரித்த போது, “அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான கோப்புக்கு இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. மத்திய உள்துறையிடம் ஆளுநர் தான் பேசி ஒப்புதல் வாங்க வேண்டும்” என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT