Published : 14 Aug 2023 02:56 PM
Last Updated : 14 Aug 2023 02:56 PM

முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான மேலாண்மை படிப்பு - சென்னை ஐஐடியில் அறிமுகம்

சென்னை ஐஐடி

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் மேலாளர்களுக்கு பயிற்சி அளிக்க 'மிக முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான செயல்பாடுகள் மற்றும் விநியோகச் சங்கிலி பகுப்பாய்வு' என்ற சான்றிதழ் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 'மிக முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான செயல்பாடுகள் மற்றும் விநியோகச் சங்கிலி பகுப்பாய்வு' (Operations and Suppy Chain Analytics for Strategic Decision Making) என்ற சான்றிதழ் பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது. கிடைக்கும் தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் முக்கிய முடிவுகளை எடுக்க மேலாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் விளையாட்டுக் கோட்பாடு (game theory) போன்ற பகுப்பாய்வுத் திறன்களை மேம்படுத்துவதில் இப்பாடத்திட்டம் கவனம் செலுத்துகிறது. சென்னை ஐஐடியின் சென்டர் ஃபார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன் (CODE) இப்பாடத்திட்டத்தை வழங்குகிறது.

பாடத்திட்டத்தின் ஆரம்ப நிலையில் (தொகுதிகள் 1, 2) பகுப்பாய்வு அடித்தளங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும். தொடர்ந்து, பல்வேறு நடைமுறைப் பயன்பாடுகள் (தொகுதி 3) குறித்து விரிவாக கற்பிக்கப்படும். இப்பாடத்திட்டம் தற்போது தொழில்துறை எதிர்கொள்ளும் பெரும்பாலான செயல்பாடுகள் மற்றும் விநியோகச் சங்கிலி சிக்கல்கள் குறித்த விரிவான நுண்ணறிவை வழங்கும். இப்பாடத்திற்கு விண்ணப்பிக்க குறிப்பிட்ட தகுதி அளவுகோல் எதுவும் இல்லை என்றாலும், கணிதம் மற்றும் புள்ளியல் கருத்துகளின் அடிப்படைப் புரிதல் இதற்கு அவசியமாகிறது. இதில் பங்கேற்போர் பகுப்பாய்வு மாதிரி உருவாக்கம் மற்றும் தரவு சார்ந்த முடிவுகளை எடுப்பதில் ஆர்வத்தோடு இருப்பது நல்லது.

விண்ணப்ப பதிவு செய்வதற்கான கடைசி நாள் 20 செப்டம்பர் 2023. ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் - https://code.iitm.ac.in/operations-and-supply-chain-analytics-for-strategic-decision-making

இதுபோன்ற பாடநெறிகளின் அவசியம் குறித்து விளக்கிய சென்னை ஐஐடி-யின் மேலாண்மைக் கல்வித் துறை பேராசிரியர் ராகுல் மராத்தே, "கிடைக்கும் தகவல் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மேலாளர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். தரவு சார்ந்த முடிவெடுக்கும் திறன், தற்போது நிறுவனங்களின் முக்கிய திறமையாகக் கருதப்படுகிறது. 'முடிவெடுக்கும் அறிவியல்' மேலாளர்களுக்கு உகந்த முடிவுகளை எடுக்கத் தேவையான கட்டமைப்பை உருவாக்க உதவும். இந்த கோட்பாடு கணிதம் மற்றும் அனுபவ மாதிரி போன்ற முக்கிய கூறுகளை உள்ளடக்கியதாகும்.

உலகின் தற்போதைய சூழல் நிச்சயமற்ற தன்மைகளால் வகைப்படுத்தப்படுகிறது. நிச்சயமற்ற சூழல் நிலவுவதால் தரவுகளும், முடிவுகளும் நிச்சயமற்றதாகவே அமைகின்றன. எனவே நிச்சயமற்ற தன்மை மற்றும் உகந்த முடிவு எடுப்பதில் எற்படும் தாக்கம் ஆகியவை குறித்த நல்ல புரிதல் அவசியமாகும். ஒரு நல்ல மேலாளர் நிச்சயமற்ற நிலையில் முடிவெடுப்பதில் திறமையானவராக இருத்தல் அவசியம்" என தெரிவித்தார்.

மேம்படுத்துதல், விளையாட்டுக் கோட்பாடு (game theory), நிகழ்தகவுக் கோட்பாடு, புள்ளிவிவர மாதிரியாக்கம் போன்ற பகுப்பாய்வுத் திறன்களை உருவாக்குவதில் இப்பாடத்திட்டம் கவனம் செலுத்தும். பகுப்பாய்வுக் கருவிகளின் பயன்பாடுகள் மூலம் மேலாளர்கள் எடுக்க வேண்டிய தினசரி முடிவுகளுக்கான தொகுதிகளை இப்பாடத்திட்டம் உள்ளடக்கியதாகும். உதாரணமாக, சரக்கு தேர்வுமுறை, விநியோகச் சங்கிலித்தொடர் மேலாண்மை, நெட்வொர்க் வடிவமைப்பு, தளவாடத் திட்டமிட்டல் மற்றும் சேவை மேலாண்மை போன்ற செயல்பாட்டு முடிவுகளை கணித ரீதியாக பகுப்பாய்வு செய்ய முடியும். சுகாதார மேலாண்மை, வேளாண்மை, பொதுமக்களுக்கான கொள்கை போன்றவற்றில் இதே பகுப்பாய்வுக் கருவிகள் பொருத்தமாக அமைந்துள்ளன. இந்த துறைகளில் உள்ள பிரச்சனைகளும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். இப்பாடத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் முக்கிய கற்றல் முடிவுகள்

Ø பகுப்பாய்வு மாதிரியாக்கத்தின் பல்வேறு முறைகளை விவரித்தல்

Ø விநியோகச் சங்கிலி மேலாண்மையில் மாதிரிப் பயன்பாட்டை செய்துகாட்டுதல்

Ø விநியோகச் சங்கிலி மேலாண்மையில் மாறக்கூடிய மற்றும் சீரற்ற தன்மையுடன் பரிசோதித்தல்

Ø செயல்பாடுகள் மற்றும்/ அல்லது விநியோகச் சங்கிலி சிக்கலை பகுப்பாய்வு மாதிரியாக உருவாக்கி, பொருத்தமான முறைகளைப் பயன்படுத்தி அவற்றைத் தீர்த்தல்

Ø குறிப்பிட்ட தொழில்கள் மற்றும் நிறுவனங்களில் விநியோகச் சங்கிலி முறைக்கு உரிய பகுப்பாய்வு முடிவெடுக்கும் கருவியை வடிவமைத்தல்

இவ்வாறு சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x