Published : 08 Aug 2023 01:18 PM
Last Updated : 08 Aug 2023 01:18 PM
அரூர்: தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் நூலகத்தை விரிவுபடுத்தி கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் (பொம்மிடி) பேரூராட்சி வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சி அலுவலகம் பின்புறமாக முழு நேர நூலகம் அமைந்துள்ளது.
கடந்த 1966-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில் சுமார் 5,500 உறுப்பினர்களும், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களும் உள்ளன. சமீபத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் நலனுக்காக தருமபுரி மாவட்டத்தில் மெய்நிகர் நூலகம் 2 தொடங்கப்பட்டது. இதில், பொ.மல்லாபுரம் நூலகமும் ஒன்றாகும்.
தினசரி 80 முதல் 100 வாசகர்கள் வந்து செல்லும் நூலகத்தில் வாசகர்கள் அமர்ந்து படிக்கக் கூடிய அளவிற்கு போதிய இட வசதி இன்றி காணப்படுகிறது. இருக்கும் கட்டிடத்தில் பெரும் பகுதியில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுப் புறங்களில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக உள்ளதால் மாணவர்கள், இளைஞர்கள் அதிகளவில் நூலகத்துக்கு வந்து செல்கின்றனர்.
குறிப்பாக போட்டித் தேர்வு சமயங்களில் குறிப்பெடுப்பதற்காக ஏராளமானோா் இந்த நூலகத்திற்கு வந்து செல்கின்றனா். இது தவிர மெய்நிகர் நுாலகம் அறிவிக்கப்பட்ட பின்னர் தினசாி 20 முதல் 50 பள்ளி மாணவ, மாணவிகள் வரும் நிலையில் அவர்கள் அமரவோ, காணொலியை காணவோ வசதியின்றி நின்ற படியே கவனிக்கும் நிலை உள்ளது. எனவே நூலகத்தை விரிவுபடுத்தி கட்ட வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வாசகர்கள் கூறும்போது, பொ.மல்லாபுரம் நூலகத்தையொட்டி காலி இடம் உள்ளது. அந்த இடத்தில் நூலகத்துக்கு கூடுதல் கட்டிடம் கட்டித் தர வேண்டும். இதன் மூலம் மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமின்றி வாசகர்கள் அதிகளவில் நூலகத்துக்கு வந்து செல்ல வாய்ப்பு ஏற்படும். இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT