Last Updated : 04 Aug, 2023 03:31 PM

1  

Published : 04 Aug 2023 03:31 PM
Last Updated : 04 Aug 2023 03:31 PM

விளையாட்டு உபகரணங்கள் இல்லாததால் தவிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

அரூர்: அரசுப் பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் இல்லாததால் மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சி பெறுவதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

பள்ளி தொடங்கிய நாள் முதல் அனைத்து மாணவர்களுக்கும் விளையாட்டுத் திறனை கண்டறியும் வகையில் பயிற்சி அளித்து அவர்களில் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். அவர்கள் தங்களது திறமையால் வென்று பள்ளிக்கு பெருமை சேர்ப்பர்.

ஆனால், தற்போது அரசுப் பள்ளிகளில் விளையாட்டுக்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருவதாக புகார் எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் வாழ்வில் முன்னேற கல்வி மட்டுமே இல்லாமல் தங்களது அடுத்த கட்ட நகர்வுக்கு விளையாட்டு பெரும் உதவியாக இருக்கும்.

மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிப்பெறுவதன் மூலம் கல்லூரிகளில் சேர விளையாட்டு துறைக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு உதவும். மேலும், தொடர்ந்து விளையாட்டில் சாதிக்கும்போது அரசுப் பணிகள், ரயில்வே, ராணுவம், காவல் துறைகளில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்று தங்களது வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள முடியும்.

இந்நிலையில், சமீப காலமாக பள்ளிகளில் விளையாட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் குறைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. பள்ளிகளில் போதிய மைதானங்கள் இல்லாதது, இருக்கும் மைதானங்களும் பராமரிப்பின்றி இருப்பது, விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் இருப்பது போன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ளன.

இருந்தபோதிலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தருமபுரி மாவட்டம் கடத்தூர் நண்பர்கள் கால்பந்து குழுத் தலைவர் குமார் கூறியதாவது: நகர்ப்புறங்களில் உள்ள மாணவர்களை விட கிராமப்புற மாணவர்களுக்கு உடல்திறன் அதிகம் உள்ளது. உரிய பயிற்சி அளிப்பதன்மூலம் சிறந்த வீரர்களை நாம் பெற முடியும். இதற்குத் தேவையான மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்க அரசு சார்பில் பள்ளிகளுக்கு சிறப்பு தொகை வழங்கப்படுகிறது. ஆனால், அந்த தொகை குறைவாக வழங்குவதால் ஆய்வகங்களுக்குத் தேவையான அறிவியல் உபகரணங்கள் மற்றும் பள்ளித் தேவைக்கான பொருட்கள் வாங்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இதனால், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் பந்து, வலைகள் உள்ளிட்ட பொருட்கள் மிகக் குறைந்த அளவே உள்ளன. மேலும், அவை உடைந்து சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் பள்ளிகளில் தேசிய விளையாட்டான ஹாக்கி, கூடைப்பந்து, பூப்பந்து, பாட்மிண்டன், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்க முடியாமல் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர்.

தன்னார்வலர்கள், முன்னாள் வீரர்கள் மூலம் ஒரு சில விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு அதன்மூலம்பயிற்சி அளிக்கப்படுகிறது.

பல்வேறு விளையாட்டுகளுக்கு உபகரணங்கள் இல்லாததால் பல பள்ளிகளில் கபடி, கோ-கோ போன்ற விளையாட்டுகளுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே, அனைத்து விளையாட்டுகளுக்குமான உபகரணங்களை அரசுப் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். மேலும், தடகளத்திற்கான உபகரணங்கள் வழங்கி சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டும்.

மிக முக்கியமாக பள்ளிகளில் விளையாட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குவதன் மூலமே, மாநில, தேசிய அளவிலான சிறந்த வீரர்களை உருவாக்க முடியும். இளம் பருவத்தில் முறையான பயிற்சி மட்டுமே சிறந்த வீரர்களை உருவாக்க முடியும். எனவே, விளையாட்டுக்கு அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x