Published : 29 Jul 2023 06:32 AM
Last Updated : 29 Jul 2023 06:32 AM

அன்பாசிரியர் விருது விழா | ஆசிரியர்களை என்றைக்கும் மாணவர்கள் மறந்துவிடக் கூடாது: அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு

சென்னையில் நேற்று நடைபெற்ற ‘அன்பாசிரியர்’ விருது வழங்கும் விழாவில், ‘முன்மாதிரி அன்பாசிரியர்’ விருது பெற்ற ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

சென்னை: தங்களது ஆசிரியர்களை மாணவர்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது எனசென்னையில் நேற்று நடைபெற்ற ‘அன்பாசிரியர்’ விருது வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் பயிலும்மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிப்பதோடு நின்று விடாமல், மாணவர்கள் மீது பேரன்பும், அவர்களின் வளர்ச்சி குறித்த அக்கறையும் கொண்ட ஆசிரியர்களைக் கவுரவிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து 2020-ம் ஆண்டு முதல் ‘அன்பாசிரியர்’ விருது வழங்கி வருகிறது.

600 ஆசிரியர்கள் விண்ணப்பம்: இந்நிலையில் 3-வது ஆண்டாக ‘அன்பாசிரியர் 2022’ விருதுகளுக்கு தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 600 ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். இதில் 350 பேர்முதல்கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இறுதிச்சுற்றில் கலந்து கொண்டனர்.

இறுதியாக மூத்த கல்வியாளர்கள் அடங்கிய தேர்வுக்குழு மூலமாக மொத்தம் 35 ஆசிரியர்கள் ‘அன்பாசிரியர்’ விருதுக்கும், 6 ஆசிரியர்கள் ‘முன்மாதிரி அன்பாசிரியர்’ விருதுக்கும் என 41 பேர் தேர்வாகினர்.

தேர்வு பெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் தலைமை வகித்துப் பேசியதாவது;

பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறைஆகிய 2 துறைகளும் லாபம் நோக்கம் இல்லாத, தன்னலமற்ற சேவை துறைகள். உடலைக் குணப்படுத்துபவர்கள் மருத்துவர்கள் என்றால், மனதைக் குணப்படுத்தி, செம்மைப்படுத்தும் ஆசிரியர்களும் மருத்துவர்கள்தான்.

ஆசிரியர்கள் தேர்வில் கவனம்: இந்த விருதுகளுக்கான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம்செலுத்தி இருக்கிறோம். ’பிரம்மோஸ்’ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருப்பது பெருமை அளிக்கிறது. சிவதாணுபிள்ளையின் ‘பிரம்மோஸ்’ கனவைக் கிளப்பி விட்டதும் ஒரு ஆசிரியராகத்தான் இருந்திருப்பார். ‘பிரம்மோஸ்’ ஏவுகணையைக் கண்டு உலக நாடுகளே அஞ்சுகின்றன. அந்தவகையில், இந்தியாவின் தந்திரம் தமிழனுடைய அறிவியலைச் சார்ந்து இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 41 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: அரசு பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம். இந்த வாக்கியத்துக்குக் காரணமாக இருப்பவர்கள் அரசு பள்ளி மாணவர்கள்தான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி இஸ்ரோ மூலமாக அரசு பள்ளி மாணவர்களை வைத்து ஒரு மென்பொருள் உருவாக்க வேண்டும் என முடிவு செய்தோம். இந்நிலையில், திருமங்கலத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் 10 பேர் இதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டுள்ளனர் என்ற செய்தியை அறிந்தேன்.

அரசு பள்ளி மாணவர்கள் ரஷ்யா பயணம்: இதையடுத்து, உடனடியாக அந்த பள்ளிக்குச் சென்று அந்த மாணவிகளைப் பாராட்டினேன். 150 சிறிய செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்துகின்ற பணியில் அரசு பள்ளி மாணவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ‘பிரம்மோஸ்’ஏவுகணையின் தந்தை என அழைக்கப்படக்கூடிய, சிவதாணுபிள்ளை, இந்தமாணவர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் நமக்கு ஆதரவுக் கரம் நீட்டிய நாடு ரஷ்யா. இன்று அந்தநாட்டுக்கு நமது அரசு பள்ளி மாணவர்கள் செல்கிறார்கள் என்பது பெருமையாக இருக்கிறது. விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடிஒதுக்கீடு செய்யும் அளவுக்கு தொழில்நுட்பத்தில் தமிழகம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

செல்போன், மென்பொருள் உள்ளிட்ட எந்த தொழில்நுட்பமாக இருந்தாலும், அதனை பயனுள்ள வகையில் மாற்றும் முதல்வரை தமிழகம் பெற்றுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் ரஷ்யா செல்வதைக் கண்டு, அவர்களின் பெற்றோரைவிட, மாணவர்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்கள்தான் அதிகம் பெருமை கொள்வார்கள். ராமேசுவரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்து, இந்தியாவின் குடியரசுத் தலைவராக அனைவருக்கும் பெருமையைத் தேடி தந்தவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.

குடியரசுத் தலைவராக இருந்தாலும், தென்மாவட்டங்களுக்கு வரும் போதெல்லாம், தனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களை மறவாமல் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் அப்துல்கலாம். அந்தவகையில், அவர் மறைவதற்கு 9 நாட்களுக்கு முன்பாக, தனக்கு பாடம் நடத்தியதிண்டுக்கல்லைச் சேர்ந்த ஆசிரியர் சின்னசாமியை பார்க்கச் சென்றிருந்தார்.

நம்மை ஏற்றி விடும் ஏணி: எனவே, நம்மை ஏற்றி விடுகின்ற ஏணியாக இருக்கும், நாம் படித்த பள்ளிக்கூடங்களையும், ஆசிரியர்களையும் என்றைக்கும் மறந்துவிடக் கூடாது என்பதை மாணவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்லூரியின் ஆலோசகரும் ‘பிரம்மோஸ்’ விஞ்ஞானி ஏ.சிவதாணுபிள்ளை, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ், இந்திய -ரஷ்ய தொழில்வர்த்தக சபை செயலாளர் தங்கப்பன், அன்னை வேளாங்கண்ணி கல்வி குழுமத்தின் செயலாளர் தேவானந்த், அவரது மனைவி தேவி தேவானந்த், ரேடியோ சிட்டி விளம்பர பிரிவு தலைவர்பிரவீன்குமார், ‘இந்து தமிழ் திசை’ தலைவர் விஜயா அருண், தலைமை இயக்க அலுவலர் சங்கர் வி.சுப்பிரமணியம், விற்பனைப் பிரிவு பொதுமேலாளர் டி.ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த விருதுகளை ராம்ராஜ் காட்டன்நிறுவனத்துடன் சேர்ந்து, லட்சுமி செராமிக்ஸ், இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப்டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் மற்றும் விழாவை வர்த்தமானன் பதிப்பகம், அன்னை வேளாங்கண்ணி கல்விக் குழுமம், பொன்வண்டு டிடர்ஜெண்ட் நிறுவனம் இணைந்து வழங்கின. மேலும், ரேடியோ பார்ட்னராக ரேடியோ சிட்டியும், விழா அரங்கத்தின் பார்ட்னராக ரஷ்ய கலாச்சார மையமும் பங்கேற்றது குறிப் பிடத்தக்கது.

இந்நிகழ்வை காணொலியில் https://www.youtube.com/live/JbS9ThPFvq4?feature=share என்ற யூடியூப் லிங்க்கில் காணலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x