Published : 27 Jul 2023 06:42 AM
Last Updated : 27 Jul 2023 06:42 AM

கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு: 31 பேர் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று சாதனை

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானது. இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் உட்பட 31 பேர் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி.- ஏ.ஹெச்.), உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்.), பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்பு (பி.டெக்), கோழியினதொழில்நுட்ப பட்டப் படிப்பு (பி.டெக்.) ஆகிய படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது.

இந்நிலையில், மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஆன்லைனில் நேற்று வெளியானது.

அரசுப் பள்ளி மாணவர்கள்: பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் தரவரிசை பட்டியலில் அரியலூர் மாணவர் எம்.ராகுல்காந்த், தருமபுரி மாணவி வி.கனிமொழி, தென்காசி மாணவி எஸ்.முத்துலட்சுமி உள்ளிட்ட 31 பேர், 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள சேலம் மாணவர் கே.விக்னேஷ், பெரம்பலூர் மாணவர் எஸ்.அஜய் ஆகியோர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, பி.டெக். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் அரியலூர் மாணவர் விஷ்ணு பிரகாஷ் 200-க்கு 199.5 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். திருவண்ணாமலை மாணவி ஆர்.தர்ஷா (198.5), கள்ளக்குறிச்சி மாணவி வர்ண ஓவியா (198) ஆகியோர் 2, 3-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

7.5 சதவீத உள்ஒதுக்கீடு: நடப்பாண்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச். படிப்பில் 45 இடங்கள், உணவுத் தொழில்நுட்பப் படிப்பில் 3 இடங்கள், பால்வளத் தொழில்நுட்பப் படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்பப் படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச் படிப்புகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில் சேலம் மாணவர் கே.விக்னேஷ், பெரம்பலூர் மாணவர் எஸ்.அஜய் ஆகியோர் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று முதலிடம் வகிக்கின்றனர். திருவண்ணாமலை மாணவி வி.பானுபிரியா, மதுரை மாணவி டி.நித்யா ஆகியோர் 199.5 மதிப்பெண்களும், மதுரை மாணவி பி.தாமரைசெல்வி 198.5 மதிப்பெண்ணும் பெற்று 2, 3-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

பி.டெக். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் திருவண்ணாமலை மாணவி இ.சரண்யா (197), மாணவர் ஜி.அன்பரசு (196.5), பெரம்பலூர் மாணவர் வி.சிவா (196) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.

அடுத்த மாதம் கலந்தாய்வு: இந்தப் படிப்புகளுக்கு ஆகஸ்ட் மாதம் கலந்தாய்வு நடைபெற உள்ளது. சிறப்புப் பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மற்றும் பி.டெக்.படிப்புகளுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக நடைபெறும். மற்ற அனைத்து இடங்களும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x