Published : 21 Nov 2017 10:52 AM
Last Updated : 21 Nov 2017 10:52 AM
விஞ்ஞானி என்றாலே வயதான தோற்றம், நரைத்த முடி, பெரிய கண்ணாடிகள் அணிந்த உருவம்தான் கண்முன்னே தோன்றும். ஆனால், கண்டுபிடிப்புக்கும் வயதுக்கும் தொடர்பில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பத்தாம் வகுப்புப் பயிலும் மூன்று மாணவர்கள் புதிய இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கடலில் கலக்கும் கச்சா எண்ணெய்யை அப்புறப்படுத்த ‘ஆயில் சேவர்’ என்ற புதிய இயந்திரத்தை இந்த மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
விளக்கம் தந்த வெற்றி
மதுரை மாவட்டம் வீரபாஞ்சான் பகுதியில் உள்ள லட்சுமி (ஐ.சி.எஸ்.இ.) பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்கள் முத்து ஐஸ்வர்யா, சாகித்ய நிருபன், கோமதி என்னும் இந்த மாணவர்கள். உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஐ.ஐ.டி. கான்பூர், தேசிய அளவிலான ‘இளம் கண்டுபிடிப்பாளர்கள்’ இறுதிப் போட்டியை சில வாரங்களுக்கு முன்பு நடத்தியது. இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 1000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இறுதிப் போட்டிக்கு 16 குழுக்கள் தேர்வுசெய்யப்பட்டன. அவற்றில் ஒன்று இந்த மாணவர் குழு. ‘ஆயில் சேவர்’ இயந்திரத்தின் செயல்முறை விளக்கத்தை மாணவர்கள் சிறப்பாக எடுத்துரைத்துள்ளனர். மாணவர்களின் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையிலும் மற்ற கண்டுபிடிப்புகளைவிடச் சிறப்பாக இருந்ததாலும் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இதற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
கடலுக்கு வெறும் வாளியா?
சென்னை எண்ணூர் பகுதியில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதியல் ஏற்பட்ட விபத்தில் கச்சா எண்ணெய் மெரினா கடற்பகுதியில் கொட்டிது. இது மிக மோசமான சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் விளைவித்தது. கச்சா எண்ணெய்யை அப்புறப்படுத்துவதற்கு முறையான கருவிகள் இல்லாத காரணத்தால் கடல்சார் பொறியியல் படிக்கும் மாணவர்கள், மீனவர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து பல நாட்களாக பிளாஸ்டிக் வாளியால் கச்சா எண்ணெய்யை அப்புறப்படுத்திவந்தனர். அதிநவீன இயந்திரங்கள் கொண்டு இந்த கச்சா எண்ணெய் அப்புறப்படுத்தப்படும் என அரசு தரப்பு சொல்லிக்கொண்டிருந்த நிலையில் பிளாஸ்டிக் வாளிதான் கடைசிவரை பயன்படுத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் முத்து ஐஸ்வர்யா, சாகித்ய நிருபன், கோமதி ஆகிய மூன்று மாணவர்களைச் சிந்திக்கவைத்திருக்கிறது. அப்போது, அவர்களுடைய ஆசிரியை லட்சுமி, “கச்சா எண்ணெயைப் பிரித்து எடுக்கும் இயந்திரத்தை உருவாக்க முயலுங்கள்” என்று ஊக்குவித்திருக்கிறார்.
மூளையாகச் செயல்பட்ட மாணவி
கணினி நிரல் (programming) உருவாக்குவதில் படுவேகமாகச் செயல்படுகிறார் மாணவி முத்து ஐஸ்வர்யா. எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கணினி நிரல்களைச் சுயமாக எழுதக் கற்றுக்கொண்டவர் இவர். ‘ஆயில் சேவர்’ இயந்திரத்தின் கணினி நிரலை எழுதியவர் முத்து ஐஸ்வர்யாதான்.
“கடலில் கொட்டப்பட்ட கச்சா எண்ணெயை மாணவர்கள் வாளியைகொண்டு அள்ளிய காட்சி எங்களை மிகவும் பாதித்தது. அதற்கான தீர்வு காண முடிவெடுத்தோம். நீரின் அடர்த்தியை விடவும் எண்ணெய்யின் அடர்த்தி குறைவு. அதனால்தான் எண்ணெய் தண்ணீரின் மேலே மிதக்கிறது. இந்த அடிப்படை அறிவியலைப் புரிந்துகொண்டு இயந்திரத்தில் கச்சா எண்ணெய்யைக் கண்டுபிடிக்க இன்ஃப்ரா ரெட் சென்சார் கருவியைப் பொருத்தினேன். கறுப்பு நிறத்தில் இருக்கும் கச்சா எண்ணெய் கொட்டிக்கிடக்கும் இடத்தை சென்சார் சுட்டிக்காட்ட அங்கு ‘ஆயில் சேவர் ’ மிதந்து சென்று குழாய் மூலமாக கச்சா எண்ணெயை உறிஞ்சி இயந்திரத்தின் மேல்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தொட்டியில் நிரப்பிவிடும். தொட்டி முழுவதுமாக நிரம்பியவுடன் மீண்டும் கரைக்குத் திரும்பிவிடும். பின்னர், வேறொரு குழாய் மூலமாக கச்சா எண்ணெய்யை வெளியேற்றி மீண்டும் பயன்படுத்தும் வகையில் ‘ஆயில் சேவர்’-ஐ வடிவமைத்துள்ளோம்” என்கிறார் முத்து ஐஸ்வர்யா. மனித மூளையின் செயல்பாடு குறித்து அதிக ஆர்வம் கொண்ட இவருடைய லட்சியம் நரம்பியல் விஞ்ஞானி ஆவதாம்.
உதவிய தொப்பி
‘ஆயில் சேவர்’ இயந்திரத்தின் வடிவத்தைத் தீர்மானித்ததில் முக்கியப் பங்கு வகிக்கிறார் சாகித்ய நிருபன். “என்ன மாதிரியான வடிவில் இயந்திரத்தை உருவாக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு உதவியது கார்ட்டூன் பொம்மைகள்தான். ‘பென்10’ கார்ட்டூனில் வரும் வில்லனின் தொப்பிதான் எனக்கு இயந்திரத்தை வடிவமைக்க உதவியது. ‘இளம் கண்டுபிடிப்பாளர்’ போட்டிக்கு முதலில் நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை எழுதி அனுப்பினோம். முதல் சுற்றில் தேர்வானவுடன் எங்கள் இயந்திரத்தை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கினோம். ஒருமாத இடைவெளியில் பலமுறை இயந்திரத்தின் வடிவத்தை மாற்றி சோதித்தோம்.
இறுதிப்போட்டிக்கு ஐ.ஐ.டி. கான்பூர் சென்றிருந்தபோது மற்ற கண்டுபிடிப்பாளர்களின் இயந்திரங்கள் பார்க்கச் சிறப்பாக இருந்தன. ஆனால், அவர்களால் தங்களுடைய கண்டுபிடிப்பைத் தெளிவாக விளக்க முடியவில்லை. எங்களுடைய இயந்திரத்தின் செயல்பாட்டைத் தெளிவாக விளக்க நாங்கள் தயார் நிலையில் இருந்தோம். அந்த நேரத்தில் எங்களின் இயந்திரம் திடீரென ஓடாமல் நின்றுவிட்டது. ஒரு நிமிடம் என்ன செய்வது என்றே புரியவில்லை. ஆனால், நாங்கள் மூவரும் பதற்றமாகாமல் இயந்திரம் குறித்த எங்களின் விளக்கத்தைத் தெளிவாகக் கூறினோம். சிரமங்கள் நடுவே நாங்கள் தைரியமாக விளக்கியதைக் கேட்ட நடுவர்கள் பாராட்டி முதல் பரிசு கொடுத்தார்கள்” எனப் பூரிப்புடன் கூறுகிறார் சாகித்ய நிருபன்.
எல்லோருக்குமான இயந்திரம்
“இன்ஃப்ரா ரெட் சென்சார் பொறுத்தப்பட்டிருக்கும் இந்த இயந்திரம் நீர் புகுந்துவிடும் தன்மை கொண்டது. இதே வடிவமைப்பில் ஹைட்ரோகார்பன் சென்சார் கருவி வைத்தும் செயல்பட வைக்க முடியும். அந்தக் கருவி நீர்புகாத் தன்மை கொண்டதால் கச்சா எண்ணெய் எடுக்கும்போது எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால், அதற்கு இரண்டு லட்சம் செலவாகும். அதனால்தான் இன்ஃப்ரா ரெட் சென்சார் கருவி பொருத்தி இயந்திரத்தை உருவாக்கினோம். நாங்கள் கண்டுபிடித்துள்ள இயந்திரம் அனைவருக்கும் உதவும் வகையில், கட்டுப்படியாகக்கூடிய விலையில் இருக்க வேண்டும் என்பதில் மூன்று பேரும் கவனமாக இருந்தோம்” என்கிறார் கோமதி.
விண்ணை நோக்கிய கண்டுபிடிப்புகளைவிடவும் மண்ணுக்கான, மக்களுக்கான கண்டுபிடிப்புகள்தான் முதல் தேவை. அவ்வாறு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்படும் மக்களுக்கான கண்டுபிடிப்பாளர்களை அங்கீகரிப்பதும் ஊக்குவிப்பதும் கல்வி நிறுவனங்களின், அரசின், ஊடகங்களின் கடமை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT