Published : 24 Jul 2023 02:14 PM
Last Updated : 24 Jul 2023 02:14 PM
கிருஷ்ணகிரி: வேட்டியம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லா ததால், இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், மது அருந்தும் பாராகவும் செயல்படுவதால் நாள் தோறும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அகசிப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் வேட்டியம்பட்டி. இக்கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் வேட்டியம்பட்டி, ஆலமரத்துக்கொட்டாய், ராயக்கோட்டையான் கொட்டாய், ஏரிக் கரை, காமராஜர் நகர், பைரவாகவுண்டர் கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளயில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 253 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளி கடந்த 2018-ம் ஆண்டுக்கு முன்புவரை வேட்டியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்தது. போதிய இடவசதி இல்லாததால், இப்பள்ளிக்கென தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், மது அருந்தும் பாராகவும் மாறி உள்ளதாக மாணவ, மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, வேட்டியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் நுழையும் மர்ம நபர்கள், இரவில் வகுப்பறை வராண்டாவில் அமர்ந்து மது அருந்துகின்றனர். அங்கேயே தின்பண்டங்கள், காலி மதுபாட்டில்களை உடைத்துவிட்டு செல்கின்றனர்.
இன்னும் சிலர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தின்று வகுப்பறை சுவரில் எச்சில் துப்பியும், சிறுநீர் கழித்தும் செல்கின்றனர். காலையில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் இதனைக் கண்டு அச்சமடைந்து வருகின்றனர். மேலும், வராண்டா, பள்ளியின் முன்பு உள்ள காலி இடங்களில் உடைந்த மதுபாட்டில்களின் கண்ணாடி துண்டுகள் மீது தெரியாமல் கால் வைக்கும் மாணவர்கள் காயங்களுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தினமும் காலையில் பள்ளியில் சிதறிக் கிடக்கும் மதுபாட்டில்கள், புகையிலை பாக் கெட்டுகள், தின்பண்டங்களை அகற்றிவிட்டுத் தான் வகுப்பறைகள், அலுவலகத்திற்கு உள்ளே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவை மட்டுமின்றி பள்ளியில் இருந்த மின்மோட்டார் 2 முறை திருடு போனது. குறிப்பாக மாலை 6 மணி முதல் 10 மணி வரை, இங்கே சமூக விரோதிகள் கும்பலாக மது அருந்துவது உள்ளிட்ட பல்வேறு தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனை தடுக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். பள்ளியைச் சுற்றிலும் சிறு பாறைகள் உள்ளதால், அதனை அகற்றிவிட்டு தான் கட்ட முடியும். பாறைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
எனவே பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாலையில் இங்கேயே மது அருந்துவதை தடுக்க போலீஸார் இரவு நேரங்களில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT